தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் 103 பேருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை; கலெக்டர் வழங்கினார்


தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் 103 பேருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை; கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 7 July 2019 4:30 AM IST (Updated: 7 July 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் 103 பேருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்.

ஈரோடு,

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் முதல் கட்டமாக 103 பேருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை வழங்கும் விழா ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி, 103 பேருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். எம்.எல்.ஏ.க்கள். கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறும்போது, ஈரோடு மாநகராட்சியில் அன்னை சத்யா நகர், பவானி ரோடு ஆகிய பகுதிகளில் ரூ.35 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 448 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. மேலும் இதே பகுதிகளில் மிகவும் சிதிலமடைந்த 420 வீடுகளை இடித்துவிட்டு பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.35 கோடியே 47 லட்சம் செலவில் 448 அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு குடியிருப்பும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை ஆகியவற்றுடன் கட்டப்பட்டு உள்ளது. மேலும் இங்கு தார்ரோடு, மழைநீர் வடிகால், கழிவுநீர் அகற்றும் வசதி, தண்ணீர் சேமிப்பு தொட்டி, பூங்கா, மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்பு, தெரு விளக்குகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு முதற்கட்டமாக முழு பங்களிப்பு தொகை செலுத்திய 103 பேருக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த குடியிருப்புகளை தூய்மையான முறையில் பராமரிக்க வேண்டும்’ என்றார்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக பொறியாளர் வெங்கடேசன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story