ஆசனூர் அருகே ரோட்டில் உலா வந்த யானைகள் வாகனங்களை துரத்தியதால் பரபரப்பு


ஆசனூர் அருகே ரோட்டில் உலா வந்த யானைகள் வாகனங்களை துரத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 July 2019 10:30 PM GMT (Updated: 6 July 2019 8:53 PM GMT)

ஆசனூர் அருகே ரோட்டில் உலா வந்த யானைகள், வாகனங்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, குரங்கு, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆசனூர் வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால் வனப்பகுதியில் உள்ள செடி–கொடிகள் காய்ந்து கருகி விட்டன. வனக்குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமப்பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன. அவ்வாறு புகுந்துவிடும் யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கின்றன. மேலும் யானைகள் அங்குள்ள ரோட்டில் அடிக்கடி உலா வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர் அருகே காரப்பள்ளம் பகுதியில் உள்ள சாலையில் 6 யானைகள் உலா வந்தன. இந்த யானைகள் சாலையோரங்களில் வளர்ந்து காணப்பட்ட மரக்கிளைகளை முறித்து தின்றன. அப்போது அந்த வழியாக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள் யானைகள் நிற்பதை கண்டதும் சற்று தொலைவில் தங்களுடைய வாகனத்தை நிறுத்தினார்கள். பின்னர் ரோட்டில் நடமாடிய யானைகளை வாகன ஓட்டிகள் செல்போனில் படம் பிடித்தனர்.

அப்போது ஒருசிலர் கார்களில் இருந்து ஒலி எழுப்பினார்கள். இதனால் ஆவேசமடைந்த யானைகள், அந்த வாகனங்களை நோக்கி வேகமாக துரத்தியபடி ஓடிவந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை பின்னோக்கி நகர்த்திச்சென்றனர். பின்னர் அந்த யானைகள் சாலையோரங்களில் சுமார் ½ மணி நேரம் சுற்றித்திரிந்தது.

இதைத்தொடர்ந்து அந்த யானைகள் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. யானைகள் ரோட்டில் சுற்றித்திரிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘தற்போது சாலையோரங்களில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அதனால் யானைகள் சாலைகளில் நிற்பதை கண்டால் வாகன ஓட்டிகள் யாரும் வாகனங்களில் இருந்து கீழே இறங்க வேண்டாம்.

மேலும் அதிக அளவில் ஒலி எழுப்பி யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது. மிதமான வேகத்தில் வனச்சாலையில் பயணிக்க வேண்டும்’ என்றனர்.


Next Story