ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.17¼ லட்சம் மோசடி; பெண் உள்பட 4 பேர் கைது


ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.17¼ லட்சம் மோசடி; பெண் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 6 July 2019 10:30 PM GMT (Updated: 6 July 2019 9:12 PM GMT)

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.17¼ லட்சம் மோசடி செய்த வழக்கில் கரூரை சேர்ந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஸ்ரீநகரை சேர்ந்த பாண்டியன் மகன் விக்ரமன் (வயது 24). இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், நான் கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ.சிவில் என்ஜினீயரிங் படித்துள்ளேன். தற்போது நான் வேலை தேடி வருகிறேன். கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், கல்லூரியில் என்னுடன் படித்தார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

கடந்த ஆண்டு தினேஷ்குமார் என்னை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது சிலருடன் சேர்ந்து வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அதன்மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் எனக்கு ரெயில்வேயில் சர்வீஸ் என்ஜினீயர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.20 லட்சம் செலவாகும் என்றார்.

இதையடுத்து எனது கல்வி சான்றிதழ்களையும், ரூ.1 லட்சத்தையும் வாங்கி சென்றார். அவர் மூலம் கரூரை சேர்ந்த ஜீவானந்தம் அறிமுகமானார். பின்னர் சிலரின் வங்கி கணக்குகள் மூலம் பணம் செலுத்தும்படி கூறினர். அதன்படி பணத்தை செலுத்தினேன். அந்த வகையில் என்னிடம் இருந்து மொத்தம் ரூ.17 லட்சத்து 30 ஆயிரத்தை வாங்கினர். ரெயில்வே அதிகாரி என்று கூறி ஒரு பெண், என்னிடம் நேர்முகத்தேர்வு நடத்தினார். அதன்பிறகு எனக்கு பணிநியமன கடிதமும் கொடுத்தனர்.

பின்னர் மேற்கு வங்காள மாநிலத்துக்கு பயிற்சிக்கு அனுப்பினர். அங்கு சென்று 3 மாதம் பயிற்சி பெற்றேன். அப்போது காராக்பூரில் உள்ள ரெயில்வே அலுவலகத்துக்கு என்னை அழைத்து சென்று பணி பதிவேட்டில் கையெழுத்திட வைத்து, வேலையில் சேர்ந்து விட்டதாக கூறினர். இதற்கிடையே காராக்பூர் ரெயில்வே அலுவலகத்தில் சென்று விசாரித்தேன். அப்போது, போலி பணி நியமன ஆணை மூலம் என்னை அவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எனது பணம் மற்றும் கல்வி சான்றிதழ்களை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பெண்கள் உள்பட மொத்தம் 14 பேர் மீது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்பிரபு வழக்குப்பதிவு செய்தார். இதில் தினேஷ்குமார், ஜீவானந்தம், கோவையை சேர்ந்த பிரபாகர், கரூர் பாரிநகரை சேர்ந்த இந்திராணி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story