மாவட்ட செய்திகள்

8-வது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டாள் : ஒரு வாரமாக உயிருக்கு போராடிய சிறுமி பலி + "||" + She was pushed from the 8th floor: A little girl dies after fighting for a week

8-வது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டாள் : ஒரு வாரமாக உயிருக்கு போராடிய சிறுமி பலி

8-வது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டாள் : ஒரு வாரமாக உயிருக்கு போராடிய சிறுமி பலி
8-வது மாடியில் இருந்து 16 வயது சிறுவனால் தள்ளிவிடப்பட்ட 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானாள். காதலை ஏற்க மறுத்ததால், இந்த கொடூரம் நடந்துள்ளது.
மும்பை,

மும்பை, ஆரேகாலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி வசித்து வந்தாள். இவள் கடந்த 29-ந் தேதி இரவு கட்டிடத்தின் தரை தளத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். சிறுமியின் பெற்றோர் அவளை பவாயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்தநிலையில் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகின. இதில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். சம்பவத்தன்று அவன் சிறுமியிடம் பேச வேண்டும் என கூறி கட்டிடத்தின் 8-வது மாடிக்கு அழைத்து சென்று உள்ளான். அங்கு வைத்தும் சிறுமி அவனது காதலை ஏற்க மறுத்து உள்ளாள். இதனால் அவன் சிறுமியை 8-வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளிலும், பாலியல் தொல்லைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட சிறுவனை கைது செய்தனர். பின்னர் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

இந்தநிலையில், மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட சிறுமிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறுமிக்கு தலை, வயிற்று பகுதியில் படுகாயங்கள் ஏற்பட்டு இருந்தன. எனவே அவளுக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஒரு வாரமாக சிறுமி உயிருக்கு போராடி வந்தாள்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். அவளது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கைது செய்யப்பட்ட சிறுவன் மீது கூடுதலாக கொலை வழக்கு சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் சிறுவனை மறைத்து வைத்தல், அவனது செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்த குற்றத்துக்காக சிறுவனின் பெற்றோரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

2016-ம் ஆண்டு முதல் சிறார் சட்டப்பிரிவு கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களையும் வயது வந்தவர்களாக கருத அனுமதி அளிக்கிறது. எனவே இந்த சம்பவத்தில் 16 வயது சிறுவனை வயது வந்த குற்றவாளியாக கருத கோர்ட்டில் அனுமதி கேட்பது குறித்து சட்டவல்லுனர்களுடன் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.