சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்காததால் புறக்கணித்தோம் - நாராயணசாமி விளக்கம்


சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்காததால் புறக்கணித்தோம் - நாராயணசாமி விளக்கம்
x
தினத்தந்தி 6 July 2019 11:30 PM GMT (Updated: 6 July 2019 9:42 PM GMT)

சட்டமன்ற கட்சி தலைவர்களை திட்டக்குழு கூட்டத்துக்கு அழைக்காததால் கூட்டத்தை புறக்கணித்தோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் தலைமையில் நடந்த திட்டக்குழு கூட்டத்துக்கு சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்காதது தொடர்பாக எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கவர்னர் தரப்பிலிருந்து உரிய பதில் கிடைக்காததால் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எம்.பி.க்கள் கூட்டத்தை பாதியிலேயே புறக்கணித்தனர்.

இந்த புறக்கணிப்பு குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:

திட்டக்குழு கூட்டத்திற்கு சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள சட்டமன்ற கட்சி தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. திட்டக்குழுவின் துணைத் தலைவர் என்ற முறையில் நான் தி.மு.க., அ.தி.மு.க., பாரதீய ஜனதா, மாகி பகுதி எம்.எல்.ஏ.வையும் அழைக்க கவர்னருக்கு கடிதம் அனுப்பினேன்.

நேற்று முன்தினம் இரவு வரை அந்த கடிதத்தின் மீது முடிவு எடுக்காமல் கவர்னர் அதை திருப்பி அனுப்பிவிட்டார். கூட்டத்துக்கு வந்த அ.தி.மு.க. எம்.பி. கோகுல கிருஷ்ணன் அவர்கள் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவரை அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்தார்.

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லப்போவது நானும், அமைச்சர்களும்தான். திட்டக்குழு கூட்டம் என்பது முக்கியமானது. சட்டமன்ற கட்சி தலைவர்கள் இல்லாத நிலையில் கூட்டத்தை தள்ளிவைக்க அமைச்சர்களும், எம்.பிக்களும் கேட்டனர்.

ஆனால் கூட்டத்தை நடத்துவதிலேயே குறியாக இருந்தனர். எனவே நானும் அமைச்சர்களும் கூட்டத்தை புறக்கணித்து விட்டோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

வைத்திலிங்கம் எம்.பி. கூறும்போது, சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைப்பது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி பதில் தரவில்லை. நீங்கள் அழையுங்கள் என்று கூறினார். முறைப்படி திட்டக்குழுவின் தலைவரான கவர்னர்தான் அவர்களை அழைக்க முடியும் என்றார்.

Next Story