திட்டக்குழு கூட்டத்தில் நாராயணசாமி வெளிநடப்புக்கு காரணம் தெரியவில்லை - கிரண்பெடி அறிக்கை
புதுவையில் மாநில திட்டக்குழு கூட்டத்தில் இருந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளிநடப்பு செய்ததற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்துக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) சட்ட மன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அதன்படி இந்தாண்டு பட்ஜெட்டுக்கான வரைவு திட்டத்தை விவாதித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்கான மாநில திட்டக்குழு கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் இடையூறு காரணமாக கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை.
முன்னதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்க விரும்பி நேற்று மாலை (நேற்று முன்தினம்) எனக்கு கோப்பு அனுப்பினார்.
அதை சட்டப்படி பரிசீலனை செய்து சமர்ப்பிக்கும்படி தலைமை செயலருக்கு வலியுறுத்தினேன். இதில் கால அவகாசம் இல்லாததால் இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. இதனை காரணம் காட்டி முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் திட்டக்குழு கூட்டம் வெறும் ஆலோசனை வழங்கக் கூடியது மட்டுமே. நிதிநிலை அறிக்கை பற்றி மீண்டும் கூடி விவாதிக்க தேவையில்லை என்று சொல்லிவிட்டு கூட்டத்தை அவமதித்து வெளியேறிவிட்டனர்.
திட்டக்குழுவின் தலைவர் என்ற முறையில் வருகிற 13-ந்தேதி திட்டக்குழு மீண்டும் கூடும் என்று அறிவித்து கூட்டத்தை ஒத்தி வைத்தேன். இனிவரும் காலங்களில் அரசு கோப்புகள் பரிசீலனைக்காக உரிய நேரத்துடன் அனுப்பி வைத்து தீர்வு காண வேண்டும் என கருதுகிறேன். புதுச்சேரி அரசு ஆகஸ்டு மாதம் வரையிலான தற்காலிக நிதி ஒதுக்கீட்டின் கீழ்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தும் திட்டக்குழு கூட்டத்தை குறைத்து மதிப்பிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளிநடப்பு செய்ததற்கான உண்மையான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story