மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
x
தினத்தந்தி 6 July 2019 10:30 PM GMT (Updated: 6 July 2019 10:04 PM GMT)

தளவாய்புரம் அருகே கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தளவாய்புரம்,

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே உள்ள கிறிஸ்துவராஜபுரத்தை சேர்ந்தவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய உறவினர் மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். நேற்று வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது டிரைவர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் தனது உறவினர் மகள் 10-ம் வகுப்பு படிப்பதாகவும், அவரை அழைத்துச் சென்று சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் கல்வி உதவித் தொகைக்கு புகைப்படம் எடுத்து விட்டு அழைத்து வருவதாக கூறி உள்ளார்.

அதற்கு தலைமை ஆசிரியர், பெற்றோர் இல்லாமல் அனுப்பமுடியாது எனக்கூறியதை அடுத்து, அதே பள்ளியில் பணிபுரியும் டிரைவரின் உறவினரான ஆசிரியை ஒருவரை சந்தித்து மாணவியை புகைப்படம் எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று இவர் எனக்கும் உறவினர் தான், சம்பந்தப்பட்ட மாணவிக்கும் உறவினர் தான் எனக் கூறி புகைப்படம் எடுப்பதற்காக அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், அந்த டிரைவர் மாணவியை அருகே இருந்த காட்டு பகுதிக்கு அழைத்து சென்று தவறான முறையில் நடந்து கொண்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதை தனது செல்போனில் படம் எடுத்து மிரட்டி உள்ளார். இதையடுத்து மாணவி அவரை கீழே தள்ளி விட்டு வீட்டிற்கு தப்பி ஓடி வந்துள்ளார். பின்னர் இதுகுறித்து வீட்டில் கூறியுள்ளார்.

இதனையடுத்து, மாணவியின் தாய் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story