கூட்டணி அரசு கவிழ்ந்தால் ஆட்சி அமைப்போம் - பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பேட்டி


கூட்டணி அரசு கவிழ்ந்தால் ஆட்சி அமைப்போம் - பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 7 July 2019 4:35 AM IST (Updated: 7 July 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனிக்கிறோம் என்றும், கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ்ந்தால் ஆட்சி அமைப்போம் என்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் ராஜினாமா செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இந்த ராஜினாமாவுக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. இந்த அரசியல் நிலவரங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நாங்கள் பொறுமையாக இருப்போம். அடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறோம்.

பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை முகாமில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா அங்கீகரிக்கப்பட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவோம். இந்த கூட்டணி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வருவதை மக்கள் விரும்பவில்லை. தேர்தல் நடைபெற்றால் அது அரசுக்கு நிதிச்சுமையை தான் ஏற்படுத்தும். எங்கள் கட்சிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதனால் ஒரு பொறுப்புள்ள தேசிய கட்சியாக, தற்போது எழுந்துள்ள அரசியல் சிக்கலுக்கு தீர்வு காண நாங்கள் முயற்சி செய்வோம். கூட்டணி அரசு கவிழ்ந்தால், அரசியல் சாசனப்படி பா.ஜனதா ஆட்சி அமைப்போம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story