மேலிட தலைவர்கள் மீது அதிருப்தி இல்லை: கர்நாடக காங்கிரசில் என்னை புறக்கணித்ததால் ராஜினாமா - ராமலிங்கரெட்டி பரபரப்பு பேட்டி


மேலிட தலைவர்கள் மீது அதிருப்தி இல்லை: கர்நாடக காங்கிரசில் என்னை புறக்கணித்ததால் ராஜினாமா - ராமலிங்கரெட்டி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 7 July 2019 4:42 AM IST (Updated: 7 July 2019 4:42 AM IST)
t-max-icont-min-icon

மேலிட தலைவர்கள் மீது அதிருப்தி இல்லை என்றும், கர்நாடக காங்கிரசில் என்னை புறக்கணித்ததால் ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் ராமலிங்கரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராமலிங்கரெட்டிக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும் மந்திரி பதவி வழங்காததால் சமீபத்தில் சித்தராமையா, பரமேஸ்வர் மீது தன்னுடைய அதிருப்தியை பகிரங்கமாக ராமலிங்கரெட்டி வெளிப்படுத்தி இருந்தார். இதனால் அவர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல் வெளியானது.

அதன்படி, நேற்று காலையில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராமலிங்கரெட்டி திடீரென்று ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்த மந்திரி டி.கே.சிவக்குமார் முயன்றும் தோல்வியில் முடிந்தது. முன்னதாக ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. காங்கிரஸ் கட்சி மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து நான் புறக்கணிக்கப்பட்டேன். கர்நாடக காங்கிரசில் என்னை தொடர்ந்து புறக்கணித்து வந்தனர். கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் என்னை கண்டு கொள்ளவே இல்லை. இதனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவாகும். எனது மகள் சவுமியா ரெட்டி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது குறித்து, அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக உள்ளேன். காங்கிரசில் இருந்து விலகுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பா.ஜனதா கட்சியில் சேருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அதுபற்றி தற்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. எனது ராஜினாமாவுக்கு பின்னால் பா.ஜனதா கட்சி இல்லை. மந்திரி பதவி கிடைக்காதது, கட்சியில் என்னை புறக்கணித்தது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கிறது. காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே என்னை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் நான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.


Next Story