பூந்தமல்லி அருகே நிலத்தடிநீர் திருட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்


பூந்தமல்லி அருகே நிலத்தடிநீர் திருட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 7 July 2019 4:45 AM IST (Updated: 7 July 2019 4:59 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி அருகே விளைநிலங்களில் நிலத்தடிநீரை திருட்டுத்தனமாக உறிஞ்சி எடுப்பதை கண்டித்து தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

பருவமழை சரிவர பெய்யாமல் போனதால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. மேலும் கோடையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நிலத்தடி நீர்மட்டமும் வற்றி உள்ளது. இதனால் எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.

பெரும்பாலான சென்னைவாசிகள் லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீரை நம்பி இருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இதனால் லாரி வைத்திருப்பவர்கள் எந்த இடத்தில் தண்ணீர் கிடைத்தாலும் அதனை எடுத்துச் செல்லும் நோக்கில் தீவிரமாக உள்ளனர்.

இந்தநிலையில் பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம், பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல், கோளப்பன்சேரி ஆகிய பகுதிகளில் தனியார் விவசாய நிலங்களில் அதிக ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து இரவு, பகலாக ஜெனரேட்டர் வசதியுடன் தண்ணீர் திருட்டு நடந்து வருகிறது.

இதனை கண்டித்து பாணவேடுதோட்டம், கோளப்பன்சேரி ஆகிய 2 இடங்களில் நேற்று 200–க்கும் மேற்பட்டோர் லாரிகளை சிறைபிடித்து சாலையில் கற்கள், கட்டைகளை போட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் 60 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்ட இடத்தில் தற்போது 300 முதல் 600 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மக்களுக்கு தண்ணீர் வேண்டும் என்பதால் தான் இங்கிருந்து தண்ணீர் எடுத்துச்செல்ல நாங்கள் அனுமதித்தோம். ஆனால் இதனை தற்போது வியாபாரமாக்கி நாளொன்றுக்கு 500 முதல் 700 பெரிய லாரிகளில் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.

இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடிநீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் லாரிகள் அதிகளவில் செல்வதால் சாலைகள் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து வருகிறோம். இங்கு தண்ணீர் எடுக்க உரிய அனுமதி பெறாமல் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து வந்து தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து நாங்கள் 3–வது முறையாக போராட்டம் செய்து வருகிறோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும் லாரிகள் அதிகளவில் செல்வதால் இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை வருவாய்த்துறை மற்றும் போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது’ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் தண்ணீர் பிடிக்க வந்த லாரிகளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் தண்ணீர் லாரிகள் உள்ளே வர முடியாதபடிக்கு அந்த பாதைகளில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.


Next Story