வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் பதற்றநிலை உருவாக்கும் விதத்தில் ஈடுபடக்கூடாது கட்சியினருக்கு கலெக்டர் வேண்டுகோள்


வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் பதற்றநிலை உருவாக்கும் விதத்தில் ஈடுபடக்கூடாது கட்சியினருக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 July 2019 4:30 AM IST (Updated: 7 July 2019 9:52 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் பதற்றநிலை உருவாக்கும் விதத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபடக்கூடாது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதை அடுத்து அனைத்து கட்சியினருக்கான தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தல் பிரசாரத்தின் போது எந்தக்கட்சியும் அல்லது வேட்பாளரும் சாதி, மதம், மொழியினர் இடையே பதற்ற நிலையை உருவாக்குகிற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. ஒரு கட்சி பிற அரசியல் கட்சிகள் பற்றி குறை கூறும்போது அவர்களுடைய கொள்கைகள் திட்டம் பற்றி மட்டுமே குறை கூறுவதாக இருக்க வேண்டும். சொந்த வாழ்க்கை குறித்து குறை கூறுதல் கூடாது.

வாக்கு பெறுவதற்காக சாதி, இன, மத உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் எந்த வேண்டுகோளையும் விடுவிக்கக்கூடாது. மத வழிபாட்டுக்குரிய இடங்கள், கல்வி நிறுவனங்களை பிரசார மேடையாக பயன்படுத்தக்கூடாது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள் மாறாட்டம் போன்ற தேர்தல் குற்ற செயல்களை வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், பிற கட்சிகள் ஏற்பாடு செய்கிற கூட்டங்களில் இடையூறு விளைவிக்க அல்லது ஊர்வலங்களை கலைக்கக்கூடாது என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அல்லது அனுதாபிகள் மற்றொரு கட்சி ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டங்களில் வாய்மொழியாகவோ, எழுதியோ, கேள்விகள் விடுப்பதன் மூலம் அல்லது வினியோகிப்பதன் மூலம் அக்கூட்டங்களில் குழப்பங்களை விளைவிக்கக்கூடாது. ஒரு கட்சியின் கூட்டம் நடைபெற்று வருகிற இடத்தின் வழியாக மற்றொரு கட்சி ஊர்வலம் நடத்தக்கூடாது.

ஒரு அரசியல் கட்சி ஒட்டுகிற சுவரொட்டிகளை மற்றொரு அரசியல் கட்சியினர் அகற்றுவது கூடாது. ஊர்வலம் செல்பவர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி செல்ல வேண்டும். தேர்தல் பணிக்காக அரசு அதிகாரிகள் அல்லது பணியாளர்களை பயன்படுத்தக்கூடாது. ஆளும் கட்சிக்கு சாதகமாக வாக்காளர்களை தூண்டும் வகையில் அமைச்சர்களும், பிற அதிகாரிகளும் ஏதேனும் ஒரு வகையில் மானியங்களை அறிவிக்கவோ அது தொடர்பாக வாக்குறுதிகள் கொடுக்கவோ கூடாது.

மத்திய, மாநில அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் அல்லது வாக்குச்சீட்டு எண்ணுமிடத்துக்குள் நுழையக்கூடாது. அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் தேர்தல் விளம்பரம் செய்யக்கூடாது. சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. அவ்வாறு அனுமதியின்றி வைத்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் மெகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story