பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு ஆட்டோவில் வந்து கைவரிசை காட்டிய வாலிபர் கண்காணிப்பு கேமராவால் சிக்கினார்


பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு ஆட்டோவில் வந்து கைவரிசை காட்டிய வாலிபர் கண்காணிப்பு கேமராவால் சிக்கினார்
x
தினத்தந்தி 8 July 2019 4:30 AM IST (Updated: 8 July 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் வந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டிய வாலிபர், கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினார்.

பூந்தமல்லி,

வளசரவாக்கம் பகுதியில் வீடுகளின் பூட்டுகளை உடைத்து அடிக்கடி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. கடந்த மாதம் (ஜூன்) தனியார் நிறுவன மேலாளர் ரீகன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இதேபோல பல வீடுகளில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பகல் நேரங்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமை வீரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையனை தேடி வந்தனர்.

மேலும் கொள்ளை நடந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தபோது ஷேர் ஆட்டோவில் வரும் மர்மநபர் ஒருவர் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு சிறிது தூரம் சென்று ஆட்டோவை நிறுத்தி விட்டு நடந்து வந்து வீட்டின் பின்புறமாக பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது தெரியவந்தது.

மேலும் தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக ஒரு பையில் கொள்ளையடித்த நகையை எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 28), என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

இவர் கொள்ளையடித்த பணத்தில் ஆட்டோ வாங்கி உள்ளார். மேலும் ஆட்டோவில் சென்று திருடினால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதால் இதுபோல் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கிடம் இருந்து 36 பவுன் தங்கநகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story