என் உயிர் மூச்சு அடங்கும் வரை தமிழர்களை காக்க போராடுவேன் தஞ்சையில் வைகோ பேச்சு


என் உயிர் மூச்சு அடங்கும் வரை தமிழர்களை காக்க போராடுவேன் தஞ்சையில் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 8 July 2019 4:45 AM IST (Updated: 8 July 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

என் உயிர் மூச்சு அடங்கும் வரை தமிழர்களை காக்க போராடுவேன் என தஞ்சையில் வைகோ பேசினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை 10-ம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது. நிறைவு நாளான நேற்றுகாலை கருத்தரங்கம் நடைபெற்றது. மாலையில் பொது அரங்கம் நடைபெற்றது.

இதற்கு உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், இலங்கையில் தமிழர்கள் அழிவின் விளிம்பில் இருந்து கதறுகிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டிய கடமை தமிழகத்தை சேர்ந்த 7½ கோடி பேருக்கும் உண்டு. நாம் ஒன்றுபட்டு நின்றால் உலகை ஈழத்தமிழர்களின் பக்கம் திருப்ப முடியும். ஈழத்தில் தமிழினம் ஒரு மிகப்பெரிய இனஅழிப்புக்கு ஆளானபோது உலகமே வேடிக்கை பார்த்தது. இந்த அழிவுக்கு காரணமானவர்கள் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. ஈழத்தில் மிச்சம் இருக்கக்கூடிய மக்களாவது பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களையும் காப்போம். நம்மையும் காப்போம் என்றார்.

வைகோ

இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழினம் பேராபத்தில் சிக்கி உள்ளது. இந்தியாவில் அனைத்து பகுதிகளையும் ஆக்டோபாஸ் கரங்களால் கபளகரம் செய்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தின் வளத்தை அழிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை பாலைவனமாக்கி, பஞ்சபிரதேசத்தில் வாழும் மக்களாக தமிழர்களை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் எரிவாயு போன்ற திட்டங்களை மத்தியஅரசு செயல்படுத்த இருக்கிறது.

நம் கண்முன்னே தமிழகம் அழிந்து கொண்டு இருக்கிறது. தலைக்குமேல் கத்தி தொங்கி கொண்டு இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் அறுந்து தலையில் விழும். தமிழகத்தை அழிக்க பா.ஜ.க. மூர்க்கதனமாக செயல்படுகிறது. இந்திய நாட்டிற்கு நான் தேச துரோகி என்ற தீர்ப்பை பெற்று இருக்கிறேன். பிணையில் வெளியே இருக்கிறேன். கோட்சேவுக்கு சிலை வைப்போம் என்று கூறுபவர்களும், மகாத்மா காந்தியின் உருவபொம்மையை கத்தியால் குத்தி அவமதிப்பவர்களும் தேச பக்தர்கள். ஆனால் நான் தேச துரோகியா?

எந்த கூண்டுக்குள் இருந்தாலும் புலி உறுமும். எந்த கூண்டில் இருந்தாலும் குயில் கூவும். என் உயிர் மூச்சு அடங்கும் வரை ஈழ தமிழர்களையும், தாய் தமிழர்களையும் காக்க போராடுவேன். குரல் கொடுப்பேன். உலக தலைவர்களை எல்லாம் அழைத்து பட்டேல் சிலை நிழலில் கூட்டம் நடத்த இருக்கிறார்கள். காந்தி, நேரு பெயரை வரலாற்றில் இல்லாமல் செய்யும் முயற்சியில் பிரதமர் செயல்பட்டு வருகிறார்.

தமிழீழம் மலர பொதுவாக்கெடுப்பு மட்டுமே தீர்வு. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகஅரசு தடுக்காது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் குடிக்க தண்ணீர் இருக்காது. பாசனம் செய்ய தண்ணீர் இருக்காது. இதை தடுக்க வேண்டிய உணர்வு நம்முடையது. அந்த உணர்வு கூர்மையாக்கப்பட வேண்டும். எந்த ஆழிவு ஏற்பட்டாலும் எதிர்வினை ஏற்படும். புதிய இளைஞர்கள் உணர்ச்சியை பெற்று பொங்கி எழுவார்கள். தாய் தமிழகத்தை காப்போம். தமிழ் ஈழம் மலர பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. தலைவர் தெகலான்பாகவி, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் திருஞானம், மாவட்ட செயலாளர் பாரதி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், சமவெளி விவசாயிகள் சங்க தலைவர் பழனிராசன், வக்கீல் நல்லதுரை, தமிழ் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கலைச்செல்வன் நன்றி கூறினார்.

Next Story