14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்பதை தாமதப்படுத்தினால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் பா.ஜனதா முடிவு என தகவல்
14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை அங்கீகரிப்பதில் காலதாமதம் செய்தால், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக உள்ளார். வருகிற 12-ந் தேதி கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. இதற்கிடையே 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு சென்ற முதல்-மந்திரி குமாரசாமி, நேற்று இரவு பெங்களூரு திரும்பினார்.
குமாரசாமி அமெரிக்காவில் இருந்தபோது, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதம் நாளை(செவ்வாய்க்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் கூறியிருக்கிறார். நாளை வரை பொறுமை காக்க பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஒருவேளை சபாநாயகர் நாளை ராஜினாமா கடிதங்களை அங்கீகரிக்காவிட்டால், நாளை மறுநாள் அதாவது 10-ந் தேதி, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றால், 14 நாட்களுக்கு முன்பு இதுகுறித்த கடிதத்தை கொடுக்க வேண்டும்.
சட்டசபை கூட்டம் வருகிற 12-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அரசு தோல்வி அடைந்துவிடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
Related Tags :
Next Story