கூட்டணி ஆட்சியை தக்க வைக்க மூத்த மந்திரிகள் தங்கள் பதவியை தியாகம் செய்ய வேண்டும் மந்திரி சிவசங்கர ரெட்டி பேட்டி


கூட்டணி ஆட்சியை தக்க வைக்க மூத்த மந்திரிகள் தங்கள் பதவியை தியாகம் செய்ய வேண்டும் மந்திரி சிவசங்கர ரெட்டி பேட்டி
x
தினத்தந்தி 8 July 2019 3:45 AM IST (Updated: 8 July 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி ஆட்சியை தக்க வைக்க மூத்த மந்திரிகள் தியாகம் செய்ய வேண்டும் என்று மந்திரி சிவசங்கர ரெட்டி கூறினார்.

கோலார் தங்கவயல்,

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா டி.பாளையா கிராமத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரியும், விவசாயத்துறை மந்திரியுமான சிவசங்கர ரெட்டி, கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் கலெக்டர் அனிருத் சரவண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மந்திரி சிவசங்கர ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி இடையே சில பிரச்சினைகள் உள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பது உண்மை தான். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எம்.எல்.ஏ.க்களிடம் மேலிட தலைவர்கள் அமர்ந்து பேசினாலே பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று சில எம்.எல்.ஏ.க்கள் கூறினர். கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்தே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் இந்த கருத்தை தான் கூறி வருகிறார்கள். இதனால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

இதுதொடர்பாக கட்சி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், ஒவ்வொரு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நீடிக்க வேண்டும் என்றால், சில மூத்த மந்திரிகள் தங்கள் பதவியை தியாகம் செய்ய வேண்டும். அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதன் மூலம், கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story