நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல் கணவன்- மனைவி உள்பட 4 பேர் பலி அத்திவரதரை தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது விபத்து


நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல் கணவன்- மனைவி உள்பட 4 பேர் பலி அத்திவரதரை தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது விபத்து
x
தினத்தந்தி 8 July 2019 3:45 AM IST (Updated: 8 July 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கம் அருகே ரோட்டை கடந்தவர் மீது மோதிய மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறியதில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் கணவன்- மனைவி உள்பட 4 பேர் பலியானார்கள்.

பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் இளம்பரிதி (வயது 34). இவர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்து வந்தார். இந்த நிலையில் குடும்பத்துடன் காஞ்சீபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி நேற்று இளம்பரிதி, அவருடைய மனைவி சரஸ்வதி, இவர்களுடைய மகள் சாருமதி (3), சரஸ்வதியின் அக்காள் மகன் சதீஷ் (9) ஆகியோர் ஒரே மோட்டார்சைக்கிளில் காஞ்சீபுரத்திற்கு சென்றனர். அங்கு அத்திவரதரை தரிசனம் செய்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மாலை 5 மணியளவில் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி என்ற இடத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர்களது மோட்டார்சைக்கிள் சென்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (56) என்பவர் திடீரென ரோட்டை கடந்தார். வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் காளிமுத்து மீது மோதியது. அதன்பின்னர் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மோட்டார்சைக்கிள் அங்கு ரோட்டின் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற இளம்பரிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி சரஸ்வதி, சதீஷ் மற்றும் ரோட்டை கடக்க முயன்ற காளிமுத்து ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். சாருமதி காயமின்றி தப்பினாள்.

விபத்து குறித்து அந்த பகுதி பொதுமக்கள் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் இளம்பரிதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சரஸ்வதி, சதீஷ் மற்றும் காளிமுத்து ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்து விட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் விபத்தில் பலியான சம்பவம் செட்டித்தாங்கல் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story