மின்தடை புகார் குறித்த கணினி பதிவு மையம் திறப்பு


மின்தடை புகார் குறித்த கணினி பதிவு மையம் திறப்பு
x
தினத்தந்தி 7 July 2019 10:30 PM GMT (Updated: 7 July 2019 7:57 PM GMT)

மின்தடை புகார் குறித்த கணினி பதிவு மையம் திறப்பு.

அரியலூர்,

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் பெரம்பலூர்- அரியலூர் கோட்டமின் நுகர்வோர்களுக்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை புகார் பதிவு மையம் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை புகார் பதிவு மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க, கலெக்டர் சாந்தா குத்துவிளக்கேற்றி வைத்தார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், பெரம்பலூர் மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கருப்பையா, செயற்பொறியாளர் (பொது) சேகர், பெரம்பலூர் செயற்பொறியாளர் பிரகாசம், மின் அளவி சோதனை செயற்பொறியாளர் மேகலா, இதர உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய அலுவலர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர். மின் நுகர்வோர்கள் தங்களது பகுதிகளில் நிலவும் மின்சாரம் சம்பந்தமான குறைபாடுகளை இந்த கணினி மயமாக்கப்பட்ட மின்தடை நிவர்த்தி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1912 என்ற எண்ணிலும், 1800 599 2912 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு, அங்குள்ள ஊழியர்களிடம் புகாராக தெரிவிக்கலாம். அவர்கள் அந்த புகாரின் மீது சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பில்லாமல் இருக்கும் உடைந்த, சாய்ந்த மின் கம்பங்கள், கதவு திறந்த நிலையில் உள்ள மின் பெட்டிகள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் போன்ற தகவல்களை படங்கள் மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ சம்பந்தப்பட்ட பகுதியின் தெளிவான விலாசத்துடன் 9445851912 வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பலாம். மேலும் தரைவழி தொடர்பு எண்ணான 04328-224055 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.

Next Story