கறம்பக்குடியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு


கறம்பக்குடியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 7 July 2019 10:15 PM GMT (Updated: 7 July 2019 8:10 PM GMT)

கறம்பக்குடியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் அதே இடத்தில் திறக்க முயற்சிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடையை திறந்தால் போராட்டம் நடத்தபோவதாகவும் அறிவித்துள்ளனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தொடக்கத்தில் 2 டாஸ்மாக் கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. பின்னர் படிப்படியாக கிராம பகுதிகளில் மூடப்பட்ட மதுக்கடைகளையும் கறம்பக்குடியில் தொடங்கி தற்போது 5 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 4 டாஸ்மாக் கடைகள் ஒரே பகுதியில் செயல்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, வியாபாரிகளுக்கு தொந்தரவாக இருந்து வருகிறது. எனவே இந்த கடைகளை வேறு பகுதிகளுக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கறம்பக்குடி, அம்புக்கோவில் சாலையில் பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் அதே இடத்தில் திறக்க முயற்சி நடை பெறுகிறது. இதற்காக அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர். இதையறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்பினர், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கலெக்டருக்கு கோரிக்கை மனு

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், சமூக நல அமைப்புகள் சார்பில், புதுக்கோட்டை கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

கறம்பக்குடியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள், வியாபாரிகள் துன்பம் அனுபித்து வருகிறோம். இங்கு செயல்படும் டாஸ்மாக் கடைகளில் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும், இடமாற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல ஏற்கனவே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. எனவே மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும். போராட்டம் தான் தீர்வு என்ற நிலைக்கு மக்களை தள்ள வேண்டாம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story