தர்மபுரி அருகே தண்டவாளத்தில் பிணம்: ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து சென்று வாலிபரை கொன்ற 3 பேர் கைது
தர்மபுரி அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து சென்று வாலிபரை கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரி- சிவாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தர்மபுரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த சசிக்குமார் (வயது 29) என தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் விசாரணையை போலீசார் முடுக்கி விட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த விஜய் ராமசாமி, தர்மபுரி அருகே உள்ள இண்டூர் பகுதியை சேர்ந்த மற்றொரு சசிக்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தர்மபுரி பஸ் நிலையத்தில் வாலிபர் சசிக்குமார் சம்பவத்தன்று நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த விஜய் ராமசாமி, மற்றொரு சசிக்குமார், கார்த்திக் ஆகிய 3 பேரும் சசிக்குமாரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அவரை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு உல்லாசம் அனுபவிக்கலாம் என ஆசைவார்த்தை கூறினர். இதையடுத்து சசிக்குமார் அவர்களுடன் சென்றார். அப்போது தர்மபுரி அதியமான்கோட்டை பகுதிக்கு சென்ற அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் 3 பேரும் சேர்ந்து சசிக்குமார் வைத்திருந்த மடிக்கணினி, செல்போன், பணம் ஆகியவற்றை பறிக்க முயன்றனர்.
இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு 3 பேரும் சேர்ந்து சசிக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் மயங்கிய அவரை, இறந்ததாக நினைத்து அதியமான்கோட்டை அருகே உள்ள ரெயில் தண்டவாள பகுதிக்கு கொண்டு சென்று போட்டு விட்டு மடிக்கணினி, செல்போன், பணம் ஆகியவற்றை எடுத்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சசிக்குமார் மீது ஏறி சென்றது. இதில் சசிக்குமார் பரிதாபமாக இறந்தார். மேற்கண்ட தகவல்களை போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை குறித்து மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story