சமயபுரம் அருகே தீ விபத்து: 5 வீடுகள் தீயில் எரிந்து நாசம்; 1 மாடு, 2 ஆடுகள் செத்தன


சமயபுரம் அருகே தீ விபத்து: 5 வீடுகள் தீயில் எரிந்து நாசம்; 1 மாடு, 2 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 8 July 2019 4:30 AM IST (Updated: 8 July 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. 1 மாடு, 2 ஆடுகள் தீயில் கருகி செத்தன.

சமயபுரம்,

சமயபுரம் அருகே உள்ள கல்லுக்குடியில் கலியன் என்பவரின் மகன்கள் செல்வம் (வயது45), அம்மாசி (வயது 44), சந்திரமணி, மாசியின் மகன் குமார்(44) மற்றும் அண்ணாவி(42) ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் இவர்களின் வீட்டில் அருகில் உள்ள குப்பையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது.

காற்றின் வேகத்தால் இவர்களின் வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது. இதில் குமாருக்கு சொந்தமான 2 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. மற்றவர்களின் வீடுகளும் தீக்கிரையாகின. இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் 5 வீடுகளில் இருந்த டி.வி., மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. அத்துடன் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 1 மாடு, 2 ஆடுகள் தீயில் கருகி பரிதாபமாக செத்தன. இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே தீவிபத்து குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் தாசில்தார் ராஜேஷ்கண்ணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்கள்.

Next Story