புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் பிறமாநில மாணவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் - அ.தி.மு.க. வலியுறுத்தல்


புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் பிறமாநில மாணவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் - அ.தி.மு.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 July 2019 5:15 AM IST (Updated: 8 July 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் பிறமாநில மாணவர்கள் இடம் பெற்றது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுவை ஆளும் காங்கிரஸ்தி.மு.க. கூட்டணி அரசு தொடர்ந்து புதுச்சேரி மாணவர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. மத்திய அரசின் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீட்டை உரியநேரத்தில் அமல்படுத்தாததால் புதுச்சேரிக்கு கூடுதலாக கிடைக்கவேண்டிய மருத்துவ இடங்கள் கிடைக்கவில்லை.

மருத்துவ கனவோடு பள்ளியில் படித்த மாணவர்கள் வேறு வழியின்றி கிடைத்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகங்களோடு கூட்டணி அமைத்துக்கொண்டு புதுச்சேரிக்கு உரிய 50 சதவீத இடஒதுக்கீட்டையும் புதுச்சேரி அரசு பல ஆண்டாக பெறவில்லை. இந்த நிலையில் ஜிப்மர் மாணவர்கள் சேர்க்கையிலும் முறைகேடு அரங்கேறி வருவது மாணவர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதுவை ஜிப்மர், காரைக்கால் கிளை மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 200 இடங்களில் 55 இடங்கள் புதுவை மாநில மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த இடஒதுக்கீட்டை பெற புதுச்சேரியில் வசிப்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இங்கு வசிக்காத 110 மாணவர்கள் மாநில இடஒதுக்கீட்டிற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது நடந்தது எப்படி?

இந்த மாணவர்கள் புதுச்சேரியில் வசித்ததற்கான சான்றிதழை போலியாக வழங்கியது யார்?

கலந்தாய்வுக்கு மாணவர்கள் வரவில்லை என்பதற்காக இந்த பிரச்சினையை கைவிட்டுவிடக்கூடாது. இப்பிரச்சினையில் நடந்தது என்ன? என்பது மக்களுக்கு தெரியவேண்டும். இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த புதுவை அரசு உத்தரவிட வேண்டும்.

அரசு முன்வராவிட்டால் மத்திய உள்துறை அமைச்சகம் தாமாக முன்வந்து ஜிப்மர் மாணவர் சேர்க்கை குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story