கூடலூரில், பால் வேனை கவிழ்த்து காட்டு யானை அட்டகாசம் - பொதுமக்கள் சாலை மறியல்
கூடலூரில் பால் வேனை கவிழ்த்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதையொட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். நேற்று முன்தினம் செளுக்காடி ஊருக்குள் காட்டுயானை திடீரென புகுந்து சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார், ஜீப்பை சேதப்படுத்தியது.
மேலும் பொதுமக்களையும் துரத்தியது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முயன்றனர். பின்னர் வனத்துறையினர் சமானப்படுத்தியதால் போராட்டம் நடத்தும் முடிவை கைவிட்டனர்.
இந்த நிலையில் கூடலூர் நகரில் உள்ள பால் சொசைட்டிக்கு சொந்தமான வேனில் டிரைவர் உதயக்குமார்(வயது 40), ஊழியர் நேசராஜ் (20) ஆகியோர் நேற்று அதிகாலை தொரப்பள்ளி குனில் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்ய சென்றனர். அப்போது காலை 6 மணிக்கு இருவயல் சாலையில் இருந்து காட்டுயானை ஒன்று எதிரே வந்தது. இதை சற்றும் எதிர்பாராத டிரைவர் உதயக்குமார் உடனடியாக வேனை பின்னோக்கி வேகமாக ஓட்டினார். உடனே காட்டுயானை வேனை துரத்தியவாறு வந்தது.
அப்போது காட்டுயானை தனது தந்தத்தால் வேனின் முன்பாகத்தை குத்தி தூக்கியது. உடனே டிரைவர் உதயக்குமார், நேசராஜ் ஆகியோர் லேசான காயங்களுடன் வேனில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். மேலும் காட்டுயானை வேனை சாலையோரம் கவிழ்த்தது. இதில் வேனில் இருந்த 300 லிட்டர் பால் சாலையில் ஆறாக ஓடியது. இதனிடையே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து காட்டுயானையை கூச்சலிட்டு விரட்டியடித்தனர். பின்னர் காயம் அடைந்த உதயக்குமார், நேசராஜ் ஆகியோர் மீட்கப்பட்டு, கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காட்டுயானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த கோரி கூடலூர் தொரப்பள்ளியில் உள்ள முதுமலை வனத்துறை சோதனைச்சாவடியை பொதுமக்கள் காலை 8 மணிக்கு முற்றுகையிட்டனர். பின்னர் அங்குள்ள கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் கவுன்சிலர் சுனீல் தலைமையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சதிஷ்குமார், பிரகாஷ் உள்பட ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடந்த சில ஆண்டுகளாக தொரப்பள்ளி, குனில், வடவயல், மண்வயல், போஸ்பாரா உள்ளிட்ட பகுதிக்குள் முதுமலை வனத்தில் இருந்து காட்டுயானை வெளியேறி வருகிறது. மேலும் விவசாயிகள் பயிரிட்டுள்ள தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதுகுறித்து வனத்துறை உயரதிகாரிகள், மாவட்ட கலெக்டர் என அனைத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. தினமும் தொரப்பள்ளிக்குள் பட்டப்பகலில் காட்டுயானை வருகிறது. இதனால் பாதுகாப்பற்ற சூழலில் வசித்து வருகிறோம் என்று பொதுமக்கள் புகார் கூறினர்.
இதையடுத்து முதுமலை வனச்சரகர் சிவக்குமார் நேரில் வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாளை(இன்று) முதுமலை கரையோரம் உள்ள அகழியை ஆழப்படுத்தும் பணி தொடங்கப்படும் என்றார். இதை ஏற்று பொதுமக்கள் காலை 10 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சம்பவத்தால் கூடலூர்- மைசூரு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வெளியூர் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்தும் சீரானது.
Related Tags :
Next Story