கடலூரில், தடுப்பு கட்டையில் லாரி மோதி விபத்து - திராவகம் கசிந்து புகை மண்டலமாக காட்சி அளித்ததால் பரபரப்பு
கடலூரில் தடுப்பு கட்டையில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனால் திராவகம் கசிந்து புகை மண்டலமாக காட்சி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் முதுநகர் சிப்காட் பகுதியில் இருந்து நேற்று இரவு 11 மணி அளவில் கேன்களில் திராவகம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரி மோகினி பாலம் அருகே வந்த போது, சாலையின் நடுவே புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பு கட்டையில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த திராவகம் கசிந்து புகை மண்டலமாக காட்சி அளித்தது. உடன் இது பற்றி அக்கம், பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள், வாகன ஓட்டிகள் பார்த்து கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர். இதனால் புகை மண்டலம் விலகியது.
இதற்கிடையே முதுநகரில் இருந்து கடலூர் நோக்கி வந்த கலெக்டர் அன்புசெல்வன், விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் தீயணைப்பு வீரர்களிடம் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட உத்தரவிட்டார். மேலும் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். முன்னதாக லாரி தடுப்பு கட்டையில் மோதி நின்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்து பற்றி அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இருப்பினும் லாரியில் திராவகம் கசிந்து புகை மண்டலமாக காட்சி அளித்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story