‘பட்டாசு தொழிலை பாதுகாக்க எந்த தியாகத்தையும் செய்ய தயார்’ மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி


‘பட்டாசு தொழிலை பாதுகாக்க எந்த தியாகத்தையும் செய்ய தயார்’ மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 8 July 2019 12:18 AM GMT (Updated: 8 July 2019 12:18 AM GMT)

பட்டாசு தொழிலை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றும், அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்றும் மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

சிவகாசி,

விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் சிவகாசி, சாத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்க வசதியாக சிவகாசி பழனியாண்டவர் காலனியில் எம்.பி. அலுவலகம் அமைத்துள்ளார். அந்த அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. விழாவில் கலந்துகொண்டு எம்.பி. அலுவலகத்தை திறந்துவைத்தார். அதை தொடர்ந்து விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், தொழில் அதிபர் அரசன் அசோகன், வனராஜா, செய்யது ஜகாங்கீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

பின்னர் மாணிக்கம்தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

பசுமை பட்டாசு என்றால் என்னவென்று இதுவரை மத்திய அரசு சொல்லவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது நான் கூறியதுபோல் பட்டாசு தொழிலை பாதுகாக்க தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். நாடாளுமன்றத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தபோது பட்டாசு தொழிலுக்கு உள்ள பாதிப்பு குறித்து பேசினேன். மத்திய அரசு பட்டாசுக்கு எதிரான மனநிலையில் உள்ளது. வருடத்தில் 224 நாட்கள் புதுடெல்லியில் காற்றில் மாசு அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். அதில் தீபாவளி தினத்தையொட்டி 2 நாட்கள் தான் பட்டாசு வெடிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்காது என்று நான் விளக்கினேன்.

பட்டாசு தொழிலை காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயார். தற்போது உள்ள நிலையில் பட்டாசு தொழிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வழக்கம்போல் பட்டாசு ஆலைகள் இயங்கும். கடந்த தீபாவளியின் போது 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் இந்த நேரத்தை அதிகப்படுத்த வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசுவேன். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அடுத்த 5 ஆண்டு, 10 ஆண்டுகளில், 25 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று சொன்ன மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இந்த 6 மாதம் என்ன நடக்கும் என்று சொல்லவில்லை. புறநானூற்றை மேற்க்கோள் காட்டி பேசியது, ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்டவர்கள், பணமதிப்பு இழப்பில் பாதிக்கப்பட்டவர்கள் பேசியதுபோன்று இருந்தது. பிரதமர் மோடியை அவையில் வைத்துக்கொண்டு நிர்மலா சீதாராமன் பேசியதை பாராட்டுகிறேன். வைகோவுக்கு கொடுத்த தண்டனையை அவர் சட்டரீதியாக எதிர்கொள்வார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களின் விடுதலையில் நாங்கள் எந்த இடத்திலும் தடையாக இல்லை. நீதித்துறை என்ன நினைக்கிறதோ அதை செய்யலாம் அல்லது விடுதலை செய்தாலும் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. நளினியை தூக்கில் இருந்து காப்பாற்றியவர் சோனியாகாந்தி. சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் ரெயில்வே மேம்பாலம் பணிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது. ஆனால் மாநில அரசு தரவேண்டிய 50 சதவீத பங்கு தொகையை உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story