பாபநாசம் மலைப்பகுதிக்கு வீடு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம், காணி இன மக்கள் மனு
பாபநாசம் மலைப்பகுதிக்கு வீடு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என காணி இன மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசத்திற்கு மேலே காரையாறு அணை அருகில் உள்ள காணிகுடியிருப்பை சேர்ந்த காணி இன மக்கள் பேச்சிமுத்து, மாரியம்மாள் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு இலைகளை உடை போல் கட்டிக்கொண்டு வந்தனர். தங்களுக்கு வீடு கட்ட தேவையான கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், நாங்கள் பாபநாசம் காரையாறு முண்டந்துறை பகுதியில் உள்ள காணிக்குடியிருப்பு பகுதியில் 3 தலைமுறையாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு 1960-ம் ஆண்டு அங்கே இருப்பதற்கு நிலம் வழங்கி அரசு வீடு கட்டிக்கொடுத்தது. அந்த வீடு பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து எங்களுக்கு வீடு கட்ட அரசு அனுமதி அளித்தது. சிலர் வீடு கட்டிவிட்டனர். கஷ்டப்பட்ட எங்களால் வீடு கட்ட முடியவில்லை. எனவே தற்போது வீடு கட்ட உள்ளோம். அதற்கு தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை அனுமதி மறுக்கிறது. இதனால் நாங்கள் வீடு கட்ட முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே எங்களுக்கு வீடு கட்ட தேவையான கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த பெண்கள் பொதுச்செயலாளர் கீதா தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், தமிழ்நாடு தையல் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயதை கடந்தவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். உறுப்பினர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும். பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, தாமிரபரணி பாலத்திற்கு மாஞ்சோலை போராளிகள் நினைவு பாலம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 1999-ம் ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நடத்திய ஊர்வலத்தில் காவல்துறை நடத்திய தடியடியில் 17 பேர் இறந்தனர். இவர்களுக்கு தாமிரபரணி ஆற்றங்கரையில் நினைவு தூண் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை. தற்போது அந்த 17 பேர் உயிர் இழந்த இடத்தில் நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் கட்டப்படுகிறது. அந்த பாலத்திற்கு மாஞ்சோலை போராளிகள் நினைவு பாலம் என பெயர் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சேரன்மாதேவி பகுதி மக்கள் பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அதில், ஒரு நாளும் குடிநீர் பஞ்சம் ஏற்படாத முக்கூடலில் தற்போது குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உறைகிணறு பழுதாகிவிட்டது. இந்த உறைகிணறு தோண்டி பல வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் அதில் பல ஓட்டைகள் உள்ளன. இதில் இறந்த ஆடு, மாடு, கோழிகளின் கழிவுகள் உள்ளே சென்றுவிடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே உறைகிணற்றில் உள்ள ஓட்டைகளை அடைத்து சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கூடங்குளம் அணு மின்நிலையம் கட்டுவதற்கு இடம் கொடுத்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி, நகராட்சி பகுதிகளில் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சியை நேற்று நடத்தினார்கள். இதையொட்டி நெல்லை கலெக்டரிடமும் நேற்று சட்டபஞ்சாயத்து இயக்கத்தினர் மனு கொடுத்தனர்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 20 பேருக்கு தலா ரூ.9 ஆயிரத்து 920 மதிப்பில் ரூ.98 ஆயிரத்து 400-ல் காதுகேட்கும் கருவியையும், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 பேருக்கு ரூ.11 லட்சம் நிவாரண தொகையும், கடல் கடந்த இந்தியர்கள் 3 பேருக்கு ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் இழப்பீட்டு தொகைக்கான காசோலைகளையும் கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
Related Tags :
Next Story