மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 13 ஆண்டுகள் ஜெயில் ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 13 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் யோகநாதன் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2017–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20–ந் தேதி, கோபி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த மாணவி ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக ஏற்றிச்சென்றுள்ளார்.
பின்னர் மாணவியை ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவர் இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மாணவியிடம் மிரட்டி உள்ளார். பின்னர் மாணவியை கோபியில் கொண்டுசென்று விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
அதைத்தொடர்ந்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதார். பின்னர் மாணவியின் பெற்றோர் இதுபற்றி கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகநாதனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக யோகநாதனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக யோகநாதனுக்கு மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.500 அபராதம் விதித்தும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.