வீட்டு வேலைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்: குவைத்தில் உணவின்றி தவிக்கும் 2 பெண்கள், மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு
குவைத்திற்கு, வீட்டு வேலைக்கு சென்ற 2 பெண்கள் கொடுமை படுத்தப்படுவதாகவும், அவர்கள்அங்கு உணவின்றி தவிப்பதாகவும், எனவே மீட்டுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது ஊத்துக்குளியை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நான் பெருந்துறை பணிக்காம்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ராஜேஸ்வரி ( வயது34) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது வீட்டு அருகே வசித்து வருபவர் செல்வம் (41). தையல் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி வசந்தா மணி (34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வீடு அருகருகே உள்ளதால் இரு குடும்பத்தினர் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். இரு குடும்பத்தினரும் வறுமையில் இருந்து வந்தோம். இந்நிலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் ராஜேஸ்வரி மற்றும் வசந்தா மணியை குவைத்திற்கு வீட்டு வேலைக்கு அனுப்பிவைப்பதாகவும் அங்கு அதிகம் சம்பளம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். குடும்பம் வறுமையில் இருந்ததால் இதற்கு நாங்கள் சம்மதித்தோம்.
இதற்கு எங்களிடம் இருந்து பணம் பெறவில்லை. அதன்படி கடந்த மே மாதம் ராஜேஸ்வரி மற்றும் வசந்தா மணி இருவரும் குவைத்திற்கு சென்றனர். முதலில் ரூ.50 ஆயிரம் சம்பளம் என தெரிவித்தார். அதன் பின்னர் விமானம் ஏறுவதற்கு முன்பு ரூ.22 ஆயிரத்து 500 சம்பளம் என தெரிவித்தார். இதனால் இருவரும் மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நாங்கள் சமாதானம் செய்து அனுப்பிவைத்தோம். இதன் பின்னர் இருவரும் எங்களை செல்போனில் தொடர்பு கொண்டனர்.அப்போது அவர்களை சுற்றுலா விசாவில் அங்கு அழைத்து சென்றதாகவும், தினமும் காலை முதல் நள்ளிரவு 1 மணி வரை வீட்டு வேலை செய்ய சொல்லி கொடுமை படுத்துவதாகவும், உணவும் தருவது இல்லை என்றும், இதனை கேட்டதற்கு இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். இதில் ராஜேஸ்வரியின் கை உடைந்துள்ளது. இந்த புகைப்படத்தையும் அனுப்பிவைத்துள்ளனர். இதுபோன்று ஏராளமான கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். தற்போது அவர்களது செல்போன்களையும் பறிமுதல் செய்துவைத்துள்ளனர். இதனால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.
இது குறித்து செல்வராஜிடம் தெரிவித்தால் இருவரையும் இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்றால் தலா ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் தர வேண்டும். அவ்வாறு தரவில்லை என்றால் அவர்களால் இந்தியாவிற்கு வர முடியாது. இது குறித்து என்மேல் புகார் தெரிவித்தாலும் எதுவும் செய்ய முடியாது. குவைத்தில் தனது சகோதரன் தான் இருக்கிறார் என தெரிவித்தார். மேலும், பணத்தை கொடுக்கவில்லை என்றால் இருவரையும் உயிரோடு பார்க்க முடியாது என மிரட்டி வருகிறார்.
எனவே குவைத்தில் உணவின்றி தவிக்கும் ராஜேஸ்வரி மற்றும் வசந்தா மணியை ஆகிய இருவரையும் மீட்டு தர வேண்டும். அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணத்தை கேட்டு மிரட்டி வரும் செல்வராஜ் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
மனு கொடுக்க பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பலர் வந்திருந்தனர்.