ஆசைக்கு இணங்க வற்புறுத்தும் மில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டரிடம் ஒடிசா இளம்பெண் மனு


ஆசைக்கு இணங்க வற்புறுத்தும் மில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டரிடம் ஒடிசா இளம்பெண் மனு
x
தினத்தந்தி 9 July 2019 4:45 AM IST (Updated: 9 July 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

ஆசைக்கு இணங்க வற்புறுத்தும் மில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒடிசா இளம்பெண் கலெக்டர் அலுவகத்தில் மனு கொடுத்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அவினாசி தாலுகா உப்பிலிபாளையம் ஊராட்சி மனைப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 2001-ம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை மூலம் மனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலத்தின் அருகில் குடியிருந்த பட்டியல் சமூகத்தினருக்கு பஞ்சமி தரிசு நிலம் வழங்கப்பட்டது. மேற்கண்ட இடத்தை சிலர் ஆக்கிரமித்து விட்டனர். பட்டா நிலத்தை மீட்டு பட்டியல் சமூகத்தினருக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதுபோல் கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மற்றும் சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் “ மங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இறைச்சி கடைகளில் உள்ள கோழி, ஆடு, மீன் கழிவுகள் மங்கலம் அருகில் உள்ள நொய்யல் ஆற்றுப்பாலத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு கழிவுகளை கொட்டு பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றிருந்தனர்.

அனைத்து கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்க அரசே நிதியை வழங்க வேண்டும். விற்பனை வரியில் நலவாரிய நிதியாக ஒரு சதவீதம் நலநிதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள திருப்பூர் மாவட்ட நலவாரிய அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் நியமனம் செய்ய வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை, மானியத்துடன் கூடிய வீட்டு வசதி வழங்க வேண்டும். மாத ஓய்வூதியம், டெல்லியில் வழங்குவது போல் ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் விண்ணப்பித்த நாளில் இருந்து நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

சிவசேனா மற்றும் யுவசேனா கட்சி மாநில துணைத்தலைவர் திருமுருக தினேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில் “ சமீபத்தில் வெளியாகி உள்ள களவாணி-2 திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ள சற்குணத்தையும், அதில் நடித்துள்ள நடிகர் விமலையும் எங்களது சின்னத்தை பயன்படுத்தியதற்காக கண்டிக்கிறோம். அவர்களை கைது செய்ய வேண்டும்.

மேலும், இந்த திரைப்படத்தில் எங்கள் கட்சியின் சின்னமான வில்-அம்பை திரைக்காட்சிகளில் சித்தரித்து எங்கள் கட்சியின் சின்னத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் வெளியாகி உள்ளது. எனவே இந்த காட்சிகளை ரத்து செய்ய வேண்டும். திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்றிருந்தனர்.

இதுபோல் வீரபோயர் இளைஞர் பேரவையினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் “ பழங்குடி சீர்மரபினர் (டி.என்.டி.) எந்த மாவட்டத்தில் இருந்தாலும் பழங்குடி சீர்மரபினர் சான்றிதழ் பெற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் பழங்குடி சமுதாயம் (டி.என்.சி.) என்றே சான்று வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருப்பது சட்டத்திற்கு எதிரானது.

எனவே எங்களுக்கு பழங்குடி சீர்மரபினர் என்றே சான்றிதழ் வழங்க வேண்டும். வழங்கவில்லை என்றால் போராட்டத்தில் தீவிரப்படுத்துவோம்” என்று கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் கரடிவாவி பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கொடுத்த மனுவில் “ ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் செரதாபுரம் எனது சொந்த ஊர் ஆகும். இங்கு கரடிவாவி பகுதியில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு பஞ்சு மில்லில் எனது சகோதருடன் வேலை செய்து வருகிறேன். இந்நிலையில் மில் உரிமையாளர், எனக்கும், என் தம்பிக்கும் சம்பளம் தர மறுத்து வருகிறார். கொத்தடிமை போல் எங்களை நடத்தி வருகிறார்.

அது மட்டுமல்ல அவருடைய ஆசைக்கு என்னை இணங்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் சம்பளம் தர முடியாது என மிரட்டி வருகிறார். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, சம்பளத்தை பெற்று தர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

Next Story