மின்கம்பியில் உரசியதால் கழிவு தீக்குச்சிகளுடன் வேன் தீப்பிடித்தது


மின்கம்பியில் உரசியதால் கழிவு தீக்குச்சிகளுடன் வேன் தீப்பிடித்தது
x
தினத்தந்தி 8 July 2019 10:45 PM GMT (Updated: 8 July 2019 7:20 PM GMT)

சாத்தூர் அருகே மின் கம்பியில் உரசியதால் கழிவு தீக்குச்சிகளுடன் வந்த வேன் தீப்பிடித்தது.

சாத்தூர்,

சாத்தூர் அருகே படந்தால் பகுதியில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து கழிவு குச்சிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று ஈரோடுக்கு புறப்பட்டது. இந்த வேனை சாத்தூர் மேலகாந்தி நகரை சேர்ந்த சக்கரைபாண்டி(வயது 25) என்பவர் ஓட்டினார்.

இந்த வேன் தொழிற்சாலையை விட்டு புறப்பட்டு சிறிதுதூரம் சென்றபோது, அந்த பகுதியில் இருந்த மின்கம்பி வேனின்மேல் பகுதியில் உரசியது. இதில் வேனில் இருந்த கழிவு தீக்குச்சிகள் தீப்பிடித்து எரிய தொடங்கின. சிறிது நேரத்தில் இந்த தீ மளமளவென்று பரவியதால் வேனிலும் தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கழிவு குச்சிகள் முற்றிலும் எரிந்து விட்டன. வேனும் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் காரணமாக சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.

Next Story