குடிநீர் கேட்டு முற்றுகையிட்ட கிராம மக்கள்


குடிநீர் கேட்டு முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 9 July 2019 4:15 AM IST (Updated: 9 July 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுந்துளசி பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக வந்து குடிநீர் கேட்டு முற்றுகையிட்டு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- பொட்டகவயல் ஊராட்சிக்கு உட்பட்ட நெடுந்துளசி கிராமத்தில் கடந்த 6 மாதங்்களுக்கு மேலாக காவிரி கூட்டுக்குடிநீர் வரவில்லை. கடந்த காலங்களில் கைகொடுத்த ஊராட்சி ஒன்றிய குடிநீரும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இங்குள்ள ஊருணியில் பல மணி நேரம் காத்திருந்து ஒருகுடம் தண்ணீர் பிடித்து வருகிறோம். நிலத்தடி நீர் வற்றிவிட்டதால் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தண்ணீர் இல்லை.

இதனால் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பொட்டகவயல் பகுதிக்கும், எங்கள் ஊரை அடுத்துள்ள குன்றத்தூர், கல்லூர் பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் வருகிறது.

எங்கள் கிராமத்திற்கு தண்ணீர் வராமல் குழாயை உடைத்து பிடிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக எங்கள் பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த கிராமத்தில் வாழ வழியின்றி அனைவரும் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறுவதை தவிர வழியில்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story