புதிதாக தொழில் தொடங்க பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்கும் முகாம்


புதிதாக தொழில் தொடங்க பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 9 July 2019 4:30 AM IST (Updated: 9 July 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்கும் முகாம் நடக்க உள்ளது.

விருதுநகர்,

தமிழ்நாட்டில் வாழும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவுபடுத்தி தங்கள் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

சிறுதொழில் வியாபாரம் செய்ய தனிநபர் கடன், மகளிருக்கான சிறுகடன் திட்டம் மற்றும் காலக்்கடன் திட்டம், கறவை மாட்டுக்கடன் திட்டம், இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு சுயதொழில் தொடங்க கடன் திட்டம், மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுய தொழில் தொடங்க கடன் திட்டம், சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறு கடன் திட்டம், சிறுகுறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை அமைக்க அரசின் மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும், சந்தேகங்களையும் முகாமில் கலந்து கொண்டு தெளிவுபடுத்தி கொள்ளலாம்.

கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக கடன் வழங்கும் முகாம் வட்டார அளவில் நடைபெற உள்ளதால் இம்முகாமில் கடன் தேவைப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் கடன் தொகை பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து பயனடையலாம். வருகிற 8-ந்தேதி விருதுநகரிலும், 9-ந்தேதி காரியாபட்டியிலும், 10-ந்தேதி அருப்புக்கோட்டையிலும், 11-ந்தேதி திருச்சுழியிலும், 12-ந்தேதி சிவகாசியிலும், 15-ந்தேதி ராஜபாளையத்திலும், 16-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்தூரிலும், 17-ந்தேதி சாத்தூரிலும், 18-ந்தேதி வெம்பக்கோட்டையிலும், 19-ந்தேதி வத்திராயிருப்பிலும் கடன் வழங்கும் முகாம் நடக்க உள்ளது.

முகாமில் கடன் விண்ணப்ப படிவத்துடன் சாதிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஓட்டுநர் உரிமம் நகல் (வாகனங்களுக்கான கடன் பெறுவதற்கு மட்டும்), விலைப்புள்ளி பட்டியல்-அசல், திட்ட தொழில் அறிக்கை, புகைப்படம்-2, கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் ஆகியவற்றையும் இணைத்து வழங்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Next Story