விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்


விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 July 2019 4:30 AM IST (Updated: 9 July 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

விலையில்லா மடிக்கணினி கேட்டு பெரம்பலூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ-மாணவிகளுக்கு இன்னும் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. அந்த மாணவ- மாணவிகள் எங்களுக்கும் மடிக்கணினிகள் உடனடியாக வழங்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே, அவர்கள் படித்த பள்ளிகளின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முதற்கட்டமாக மாவட்டத்தில் தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை கடந்த 6-ந் தேதி கலெக் டர், எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கி தொடங்கி வைத்தனர். அப்போது மடிக்கணினி கேட்டு கலெக்டர், எம்.எல்.ஏ.வை முற்றுகையிட பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ- மாணவிகளை போலீசார் ஓட, ஓட விரட்டி அடித்ததால், அவர்கள் பாலக்கரையில் சாலை மறியல் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.

இந்நிலையில் நேற்று பெரம்பலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்கள் எங்களுக்கும் மடிக்கணினி உடனடியாக வழங்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் பாலக்கரை ரவுண்டானா அருகே வந்து திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை சாலை மறியலை கைவிடுமாறும், இல்லையெனில் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர். ஆனாலும் மாணவர்கள் மறியலை கைவிடாமல் மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோஷத்தை தொடர்ந்து எழுப்பினர். இதனால் போலீசாரிடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு, இது தொடர்பாக மனு ஒன்றினை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தினை போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.

Next Story