மதுரையில் துணிகரம்: ஒரேநாள் இரவில் அடுத்தடுத்து 4 பெண்களிடம் நகை பறிப்பு


மதுரையில் துணிகரம்: ஒரேநாள் இரவில் அடுத்தடுத்து 4 பெண்களிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 9 July 2019 4:00 AM IST (Updated: 9 July 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ஒரேநாள் இரவில் அடுத்தடுத்து 4 பெண்களிடம் நகை பறிக்கப்பட்ட துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை,

மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா(வயது 44). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு அவரது பேத்திக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், திடீரென்று சுஜாதா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

இதேபோல் அதே நாள் இரவு ஆனையூர் பகுதியை சேர்ந்த ஹேமலதா(38), தனது வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் பெண்ணிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஹேமலதா அணிந்திருந்த 13½ பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது அவர் நகையை இறுக்க பிடித்து கொண்டு போராடினார். ஆனால் திருடர்கள் கையில் ½ பவுன் நகை மட்டும் தான் சிக்கியது. 13 பவுன் நகை ஹேமலதா கையில் சிக்கியது. ஒரே பகுதியில் நடந்த இருவேறு சம்பவங்கள் குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே மதுரை சிம்மக்கல் வைகை தென்கரை பகுதியை சேர்ந்தவர் நாகஜோதி(29), பூ வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்களில் வந்த 2 பேர், நாகஜோதியை வழிமறித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 2¾ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதேபோன்று அதே நாள் இரவு மதுரை விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வமேரி(55) என்பவர் மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், செல்வமேரி கழுத்தில் அணிந்திருந்த 2¼ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை நகரில் நேற்று முன்தினம் இரவு மட்டும் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து 4 பெண்களிடம் 8½ பவுன் நகை பறிக்கப்பட்டது. தொடரும் நகை பறிப்பு சம்பவங்களால் அச்சத்தில் பெண்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் இரவு நேரங்களில் அதிகமான போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி, நகையை பறிக்கும் திருடர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story