அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சொத்து குவிப்பு புகார்: விசாரணை அறிக்கையை 25-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு


அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சொத்து குவிப்பு புகார்: விசாரணை அறிக்கையை 25-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 July 2019 11:30 PM GMT (Updated: 8 July 2019 7:37 PM GMT)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர் மீது வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் புகார் தொடர்பாக விசாரித்ததில் அந்த புகாரில் எந்த முகாந்திரம் இல்லை என தெரியவந்தது. அதனால் அந்த புகார் மீதான விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி 1996-ம் ஆண்டில் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை பற்றி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “இந்த வழக்கினை விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு பணியிட மாறுதல் பெற்றுவிட்டார். தற்போது புதிதாக ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். எனவே இந்த வழக்கின் அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்” என்று கோரினார்.

அதற்கு நீதிபதிகள், “ஏற்கனவே 4 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரும், ஏற்கனவே பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டும் இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை முடிந்ததாக கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்” என்றனர்.

பின்னர், மனுதாரர் புகார் குறித்த விசாரணையை அறிக்கையாக வருகிற 25-ந் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story