மாற்று இடம் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தின் முன்பு ரேஷன் கார்டை வீசி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


மாற்று இடம் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தின் முன்பு ரேஷன் கார்டை வீசி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2019 4:15 AM IST (Updated: 9 July 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

மணலிபுதுநகர் கிராம மக்கள் தங்களது வீடுகளை அதிகாரிகள் இடித்து தள்ளியதால் மாற்று இடம் வழங்க கோரி ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளை கலெக்டர் அலுவலகம் முன்பு வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் மணலிபுதுநகர் இடையாஞ்சாவடி கிராமம் டாக்டர் அம்பேத்கர் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளை வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 12-ந் தேதியன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அகற்றினார்கள்.

இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் தற்போது வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் வீடுகளை இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் தங்களின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடிநீர் வரி ரசீது, மாநகராட்சிக்கு செலுத்திய வரி ரசீது, வீட்டுமனைப்பட்டா, போன்றவற்றை கலெக் டர் அலுவலகம் முன்பு வீசி போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சென்னை அண்ணாநகர் மேற்கு திருவல்லீஸ்வரர் நகர், மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்த நர்மதா நந்தகுமார் என்ற பெண் கையில் பெருந்தலைவர் காமராஜர், ராஜராஜசோழன் ஆகியோரின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரி சீரமைக்கவேண்டும் என வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டரிடம் அளித்துவிட்டு சென்றார்.

Next Story