கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2019 4:15 AM IST (Updated: 9 July 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

தமிழகத்தில் உள்ள 4,600 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் சங்க செயலாளர்களை, தமிழக அரசு பொதுப்பணி நிலைத்திறன் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், செயலாளர் பணியிடத்திற்கு கீழ் பணிபுரிந்து வரும் உதவி செயலாளர், முதுநிலை எழுத்தர், எழுத்தர், உர விற்பனையாளர் மற்றும் பொதுவினியோக திட்ட(ரேஷன்கடை) விற்பனையாளர்கள் 10 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்தும் பதவி உயர்வுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும் நிலை ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்

இந்த இடமாற்ற நடவடிக்கையால் சங்கங்களை நலிவடைய செய்வதோடு தொடர்ந்து சம்பளம்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு பணி இழப்பை சந்திக்க நேரிடும் என்றும், மேலும் இடமாற்றத்தினால் சம்பள விகிதத்திலும் மாற்றம் ஏற்பட்டு பணியாளர்கள் மத்தியில் விரக்தி ஏற்படும் என்றும், இதனால் அரசு இடமாற்ற உத்தரவு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மாநில துணை தலைவர் துரைகண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் செல்வரத்தினம், மாவட்ட பொருளாளர் பிரபாகர் உள்பட தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், கலெக்டர் அன்பழகனை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். 

Next Story