அனகாபுத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியர் தற்கொலை முயற்சி; மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அனகாபுத்தூர் அரசு பள்ளியில், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை தாக்கியவரை கைது செய்யக்கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம்,
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கிருபானந்தம் (வயது 44). இவர், தனக்கு தெரிந்த ஒருவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் கடன் பெற்று கொடுத்ததாகவும், ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் கடனை திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நேற்று காலை ஆசிரியர் கிருபானந்தம், அந்த நபரின் வீட்டுக்கு சென்று கடனை திருப்பி தரும்படி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பள்ளிக்கு வந்த ஆசிரியர் கிருபானந்தம், கடனை திருப்பிக்கேட்ட தன்னை கடன் பெற்ற நபர் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக சக ஆசிரியர்களிடம் கூறி அழுதார்.
பின்னர் திடீரென ஆசிரியர் கிருபானந்தம், மாணவர்கள் முன்னிலையிலேயே பள்ளியின் 2-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காப்பாற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவர் மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்தார்.
இதற்கிடையில் ஆசிரியரை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த சங்கர்நகர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சங்கர்நகர் போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story