மாநில அரசுகளின் அதிகாரத்தை ‘நிதி ஆயோக்’ பறிக்கிறது - பி.ஆர். நடராஜன் எம்.பி. குற்றச்சாட்டு
மாநில அரசுகளின் நிதி அதிகாரத்தை ‘நிதி ஆயோக்’ அமைப்பு பறிக்கிறது என்று கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டினார்.
கோவை,
கோவை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பி.ஆர்.நடராஜன் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், நிதி ஆயோக் என்ற திட்டக்குழு ஏற்கனவே செயல்பட்டு வந்த திட்டக்குழுவை விட வேறுபட்டுள்ளதா?. அதனுடைய நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். அவரின் கேள்விக்கு மத்திய மந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் பதில் அளித்து பேசினார்.
இதுகுறித்து கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் கூறியதாவது:-
மத்தியில் முன்பு இருந்த திட்ட கமிஷன் நீக்கப்பட்டு அதற்கு பதில் நிதி ஆயோக் என்ற திட்டக்குழு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த திட்டக்கமிஷனில் மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். ஆனால் மத்திய அரசு புதிதாக அமைத்துள்ள நிதி ஆயோக்கில் மாநில நிதி அமைச்சர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
இந்த புதிய அமைப்பின் மூலம் மாநிலங்களின் நிதி அதிகாரம் முழுமையாக பறிக்கப்பட்டு மத்திய அரசின் கைக்கு சென்று விடுகிறது. மாநில அரசுகளின் செலவுக்கு கூட குறிப்பாக இயற்கை பேரிடர்களின்போது ஏற்படும் செலவுகளை செய்ய மத்திய அரசிடம் மாநில அரசுகள் கையேந்தும் நிலையை உருவாக்கி உள்ளது. நிதி அதிகாரம் முழுவதும் மத்திய அரசின் கைக்கு சென்று விட்டதால் மாநில அரசு நினைத்தாற்போன்று செலவு செய்ய முடியாது. இது மாநில சுயாட்சி அதிகாரத்துக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
சொத்து வரியை உயர்த்தும் அல்லது குறைக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்பிற்கு இருக்கும் அதிகாரம் கூட நாடாளுமன்றத்துக்கு கிடையாது. அதாவது ஜி.எஸ்.டி.யை அதிகரிக்கவோ, குறைக்கவோ இப்போது உள்ள நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. அப்படி குறைக்க வேண்டும் என்றால் ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் முறையிடுங்கள் என்று கூறுகிறார்கள். இப்படி சிறிது சிறிதாக மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு படிப்படியாக பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்பது தான் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story