சிவப்பு நிற ரேஷன்கார்டுதாரர்களுக்கு குப்பை வரியிலிருந்து விலக்கு - சாமிநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


சிவப்பு நிற ரேஷன்கார்டுதாரர்களுக்கு குப்பை வரியிலிருந்து விலக்கு - சாமிநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 July 2019 4:45 AM IST (Updated: 9 July 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குப்பை வரியிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை பட்ஜெட் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று கருத்து கேட்டார். இந்த கருத்துகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவரான சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது குப்பை வரியை நீக்குவதாக கூறினீர்கள். ஆனால் அதை ரத்து செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அனைவருக்கும் இல்லாவிட்டாலும் சிவப்பு நிற ரேஷன்கார்டு வைத்திருக்கும் ஏழைகளுக்காவது விலக்கு அளிக்கவேண்டும். மில்களை புனரமைப்பது தொடர்பாக விஜயன் கமிட்டி அறிக்கை கொடுத்துள்ளது. இதற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.100 கோடி வரை 10 ஆண்டு காலக்கடனாக பெற லாம். அதை வைத்து விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகைகளை வழங்கலாம். ஆனால் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

புதுவை மாநிலத்தில் 4 லட்சம் வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளிலும் கேபிள் டி.வி. இணைப்பு உள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் அரசுக்கு வரியாக ரூ.1 கோடி வரை கிடைக்கும். ஆனால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பணத்தை மக்களிடம் வசூலித்துவிட்டு வரி கட்டுவதில்லை. அவர்களிடம் இருந்து வரியை வசூலிக்கவேண்டும்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை (இன்சூரன்ஸ் திட்டம்) புதுச்சேரியிலும் அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் ரூ.5 லட்சத்துக்கு ஏழைகள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் புதுச்சேரியில் 1.03 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். அதற்கான பிரிமீயத்தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசே தருகிறது. இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசினார்.

Next Story