சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேலூர் பகுதியை சேர்க்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேலூர் பகுதியை சேர்க்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 9 July 2019 3:45 AM IST (Updated: 9 July 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் பகுதியை சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது விளாத்திகுளம் சிதம்பரநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், ‘விளாத்திகுளம் நகர பஞ்சாயத்து 12-வது வார்டுக்கு உட்பட்ட சிதம்பரநகர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவர் விடுதி உள்ளது. அந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதி வழியாக கழிவுநீர் கடலுக்கு செல்கிறது. எங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மேடாக உள்ளது. இதனால் கழிவுநீர் கடலுக்கு செல்லாமல் தேங்கி காணப்படுகிறது. அந்த கழிவுநீரை தாண்டி தான் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இதனை சரிசெய்ய வேண்டும்‘ என்று கூறி இருந்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் குலையன்கரிசல் பகுதி கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த மனுவில், நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக, குலையன்கரிசல் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் குழாய்கள் பதிக்க உள்ளன. அவ்வாறு விவசாய நிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் குழாய்களை மாற்று பாதையில் பதிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீதிமய்யம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாநகரில் உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். சேதம் அடைந்த பழைய சாலைகள் முற்றிலும் அகற்றப்பட்டு புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும். நீர்நிலைகள் அனைத்தையும் தூர்வார வேண்டும். தூத்துக்குடி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

காயல்பட்டினம் காக்கும் கரங்கள் அமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் மாற்று வழித்தடத்தில் காயல்பட்டினம் வராமல் திருச்செந்தூருக்கு செல்கிறது. இதனால் காயல்பட்டினத்தில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஏற்கனவே காயல்பட்டினம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

ஓட்டப்பிடாரம் தாலுகா மேலூர் ரைஸ்மில் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதிக்கு போதுமான குடிநீர் இல்லை. எங்கள் ஊரில் உள்ள குளத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தும் தண்ணீர் வரவில்லை. இதனால் மக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எனவே எங்கள் பகுதியை சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் சேர்த்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களின் பதவியை பொதுப்பணி நிலைத்திறன் கீழ் கொண்டு வரப்பட்டு சங்க செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ய கூட்டுறவு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனை நிறுத்தி வைக்க வேண்டும். கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் புதிய ஊதியம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அனைத்து நிலை கூட்டுறவு சங்க பணியாளர்களும் புதிய ஊதியம் பெற்று பயனடைந்து வருகிறார்கள். ஆனால் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்து வரும் நியாயவிலைக்கடை பணியாளர்களான விற்பனையாளர்கள், கட்டுனர்களுக்கு புதிய ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு காலதாமதம் இன்றி புதிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

Next Story