ஆரல்வாய்மொழி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர் புகார்


ஆரல்வாய்மொழி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர் புகார்
x
தினத்தந்தி 8 July 2019 11:00 PM GMT (Updated: 8 July 2019 9:10 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர் போலீஸ்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே உள்ள சீதப்பால் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன், கொத்தனார். இவருடைய மனைவி அருள் பியூலா(வயது 30). இவர், நாகர்கோவில் கோணம் பகுதியில் உள்2ள ஒரு வலைக்கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஆல்வின்(8), அஸ்வின்(6) என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சீதப்பால் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்.

அருள்பியூலாவும், ஸ்டீபனும் தினமும் காலையிலேயே வேலைக்கு சென்று விடுவார்கள்.

தகராறு

இந்தநிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர். மகன்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால், ஸ்டீபன் மகன்களை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். பின்னர், அவர்கள் வீடு திரும்பினர். அப்போது, இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

தூக்கில் பிணம்

அதைத்தொடர்ந்து ஸ்டீபன் வீட்டின் மேல் தளத்துக்கு சென்று படுத்து கொண்டார். நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென வீட்டில் இருந்து சத்தம் கேட்டதை அறிந்து ஸ்டீபன் கீழே வந்து பார்த்தார். அப்போது, அருள் பியூலா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். மேலும், இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சாவில் சந்தேகம்

இதற்கிடையே அருள்பியூலாவின் அக்காள் டிடிமஸ்மேரி(34) தனது வக்கீலுடன் ஆரல்வாய்மொழி போலீஸ்நிலையத்துக்கு வந்து ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது தங்கை அருள் பியூலாவின் சாவில் சந்தேகம் உள்ளது. ஸ்டீபனுக்கும் அவருடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்தது. இதனால் அவர் தினமும் அருள்பியூலாவை அடித்து துன்புறுத்தி வந்தார். இதுதொடர்பாக நாகர்கோவில் மகளிர் போலீஸ்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைக்கப்பட்டது. சம்பவத்தன்று ஸ்டீபன், எனது தங்கையிடம் வலை கம்பெனியில் இருந்து கிடைத்த சம்பளத்தை கேட்டு அடித்து துன்புறுத்தி உள்ளார். இதை எனது தங்கை என்னிடம் போனில் கூறினார். அதைதொடர்ந்து நள்ளிரவில் எனது தங்கை தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது. எனவே, எனது தங்கையின் சாவில் சந்தேகம் உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த மனு தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடக்கத்தை தடுத்தனர்

இதற்கிடையே அருள்பியூலாவின் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சீதப்பாலில் உள்ள ஸ்டீபனின் வீட்டின் முன்பு திரண்டிருந்தனர். அருள் பியூலாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சீதப்பாலுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, அங்கு திரண்டிருந்த அருள்பியூலாவின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர், அருள்பியூலாவின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை உடலை அடக்கம் செய்யக்கூடாது என்று ஸ்டீபனின் உறவினர்களிடம் ஆவேசமாக சத்தம் போட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் சுகாதேவி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அருள்பியூலாவின் சாவில் தவறு நடந்திருப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து அருள் பியூலாவின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர். 

Next Story