சிதம்பரம் நடராஜர் கோவிலில், பக்தர்களிடம் செல்போன், பணம் திருடிய தம்பதிகள் உள்பட 6 பேர் கைது
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் செல்போன், பணம் திருடிய தம்பதிகள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதை சிதம்பரம் மெய்க்காவல் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி கிருத்திகா (வயது 31) என்பவர் கீழவீதியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு தம்பதி கிருத்திகாவின் தோள்பையை பிளேடால் கிழித்து உள்ளே இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.1,000 ஆகியவற்றை திருடினர். இதேபோல் சென்னை சைதாப்பேட்டை மசூதி தெருவை சேர்ந்த குப்புசாமி மனைவி சிவகாமி(66) என்பவரின் தோள்பையை மற்றொரு தம்பதி பிளேடால் கிழித்து, உள்ளே இருந்த ரூ.14 ஆயிரம் மதிப்பிலான செல்போனை திருடினர்.
இந்த 2 தம்பதியையும் அங்கிருந்த பக்தர்கள் பிடித்து, சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், பாலவெங்கடசாமி(40)-ஜோதி(35) என்பதும், மற்றொரு தம்பதி முகிபாபு(35)-ஜம்புளம்மாள்(30) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் மீட்கப்பட்டது. இதேபோல் வாலிபர் ஒருவரிடம் ரூ.2 ஆயிரம் திருடியதாக ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தை சேர்ந்த எல்லையா மகன் கிட்டு(40), ராஜேஸ்வரராகவன் மகன் ரவிச்சந்திரா(35) ஆகிய 2 பேரை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story