மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் - மும்பைக்கு விமானத்தில் பறந்தனர்
சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ், சங்கர் ஆகியோர் கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். மேலும் அவர்கள் தங்களது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கவர்னரிடம் கடிதம் கொடுத்துவிட்டு தனி விமானத்தில் மும்பைக்கு பறந்து சென்றனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில், முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அந்த எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்கள் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுதொழில்கள் துறை மந்திரி நாகேஷ், நேற்று திடீரென தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் அவர் வாபஸ் பெற்றார். இதற்கான கடிதத்தையும் அவர் கவர்னரிடம் வழங்கினார்.
அதன் பிறகு அவர் ராஜ்பவனை விட்டு வெளியே வந்ததும், அங்கு தயாராக இருந்த காரில் ஏறினார். அந்த காரில் பா.ஜனதாவை சேர்ந்த எடியூரப்பாவின் உதவியாளர் இருந்தார். அந்த கார் எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு சென்றது. இதுபற்றி தகவல் அறிந்ததும், காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் அந்த விமான நிலையத்திற்கு விரைந்தனர்.
அங்கு தனக்காக காத்திருந்த தனி விமானத்தில் ஏற நாகேஷ் சென்றார். அவரை தடுத்து நிறுத்த காங்கிரஸ் நிர்வாகிகள் முயற்சி செய்தனர். இதனால் காங்கிரசாருக்கும், எடியூரப்பாவின் உதவியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. ஒருவழியாக நாகேஷ் தனி விமானம் மூலம் மும்பைக்கு பறந்து சென்றார். அங்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு நாகேஷ் சென்றார். அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மாலையில் மேலும் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. சங்கர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் கவர்னரை நேரில் சந்தித்து கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். மேலும், பா.ஜனதாவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் கவர்னரிடம் கூறி கடிதம் ஒன்றை வழங்கினார். பிறகு அவரும் தனி விமானம் மூலம் மும்பைக்கு சென்றார்.
மந்திரி பதவி கிடைக்கவில்லை என்று கூறி எம்.எல்.ஏ. பதவியை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் ராஜினாமா செய்துவிட்டு மும்பைக்கு சென்றுள்ளனர். ஆனால் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ள 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் பலம் 105-ல் இருந்து 107 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story