குளச்சல் அருகே அமோனியம் வாயு கசிவு: ஐஸ் கம்பெனி உரிமையாளர் கைது


குளச்சல் அருகே அமோனியம் வாயு கசிவு: ஐஸ் கம்பெனி உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 9 July 2019 10:15 PM GMT (Updated: 9 July 2019 4:43 PM GMT)

குளச்சல் அருகே ஐஸ் கம்பெனியில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

குளச்சல்,

குளச்சல் அருகே வாணியக்குடி மேட்டுகடை செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான 2 ஐஸ் கம்பெனிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஐஸ் கம்பெனியில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ் கட்டிகளை குளச்சல் துறைமுகத்தை தங்கு தலமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு மீன்களை பதப்படுத்துவதற்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ஐஸ் கம்பெனியில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு ஐஸ் கம்பெனியில் இருந்து திடீரென அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்சினை ஏற்பட்டதால் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

அந்த வாயு கசிவு அப்பகுதி முழுவதும் பரவியதால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதனால், பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதற்கிடையே வாயு கசிவு பரவியதில் அப்பகுதியை சேர்ந்த சூசைமிக்கேல் மனைவி வசந்தகுமாரி (வயது 60) மயங்கி விழுந்தார். உடனே, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்கிசிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கசிந்த வாயுவின் அழுத்தத்தை குறைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பின் அமோனியம் வாயு கசிவு கட்டுப்படுத்தப்பட்டது.

 இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து ஐஸ் கம்பெனி உரிமையாளரான குளச்சல் கோடி முனையைச் சேர்ந்த ரெஸிலின்(45) என்பவரை கைது செய்த£ர்.

Next Story