மங்களூரு டவுனில் பரபரப்பு ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார் கூட்டாளிகளுக்கு தனிப்படை போலீஸ் வலைவீச்சு


மங்களூரு டவுனில் பரபரப்பு ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார் கூட்டாளிகளுக்கு தனிப்படை போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 July 2019 4:00 AM IST (Updated: 10 July 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு டவுனில், ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். மேலும் அவருடைய கூட்டாளிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மங்களூரு, 

மங்களூரு டவுனில், ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். மேலும் அவருடைய கூட்டாளிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

5 பேர் கும்பல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் குலசேகர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை டிரைவர் உமர் பாரூக் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 5 பேர் கொண்ட ஒரு கும்பல், அந்த லாரியை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல், லாரி டிரைவர் உமர் பாரூக்கை பிடித்து சரமாரியாக தாக்கியது. மேலும் உமர் பாரூக்கிடம் இருந்து ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இந்த சம்பவம் குறித்து உமர் பாரூக் கங்கனாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கங்கனாடி போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. உடனடியாக அந்த காரை வழிமறித்து போலீசார் சோதனையில் ஈடுபட முயன்றனர். அப்போது காரில் இருந்த ஒரு நபர் போலீஸ்காரர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து போலீசார் அந்த நபரை சரண் அடைந்துவிடும்படி எச்சரித்தனர். ஆனால் அவர் தொடர்ந்து ஓட்டம் பிடித்தார். மேலும் அவரை பிடிக்க முயன்ற போலீசாரையும் தாக்க முயன்றார். இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டார். இதில் அவருடைய காலில் குண்டு பாய்ந்தது. இதனால் சுருண்டு விழுந்த அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் காரில் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பவித்ராஜ் என்பதும், பிரபல ரவுடி என்பதும், அவருடைய பெயர் போலீசாரின் ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகளில் தொடர்புடைய பவித்ராஜ் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு லாரி டிரைவர் உமர் பாரூக்கை தாக்கி பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

ரவுடியிடம் விசாரணை

இதையடுத்து போலீசார் ரவுடி பவித்ராஜை சிகிச்சைக்காக கங்கனாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் பவித்ராஜ் தாக்கியதில் கத்திக்குத்து காயம் அடைந்த போலீஸ் காரரும் சிகிச்சைக்காக கங்கனாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் ஆஸ்பத்திரிக்கு சென்று கத்திக்குத்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரரையும் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் ரவுடி பவித்ராஜிடமும் விசாரணை நடத்தினார்.

தனிப்படை போலீசார் வலைவீச்சு

அதையடுத்து பவித்ராஜின் கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது லாரி டிரைவரை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் பவித்ராஜின் கூட்டாளிகள் சந்தேஷ், அஸ்வத், சனத் ஆகியோர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும் சம்பவம் நடந்த அன்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் இருந்த உருவங்களும், சந்தேஷ் உள்ளிட்ட 3 பேரின் உருவங்களும் ஒத்துப்போயின. இதையடுத்து தலைமறைவாக உள்ள சந்தேஷ் உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் மங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story