பனியன் வேலைக்கு அழைத்து சென்று ஏமாற்றினர்: தாய்லாந்து நாட்டில் தவித்த மகனை மீட்ட தாய்


பனியன் வேலைக்கு அழைத்து சென்று ஏமாற்றினர்: தாய்லாந்து நாட்டில் தவித்த மகனை மீட்ட தாய்
x
தினத்தந்தி 10 July 2019 5:30 AM IST (Updated: 10 July 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

பனியன் வேலைக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்று தவித்த மகனை தாய் மீட்டார். இதையடுத்து திருப்பூர் திரும்பிய அவரை ரெயில் நிலையத்தில் தாயார் உருக்கமாக வரவேற்றார்.

திருப்பூர்,

திருப்பூர் ஆண்டிபாளையம் அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இவர் ஆண்டிபாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மணித்துரை (வயது 23), மணிகண்டன் (21), மணிச்செல்வம் (18) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மாரியம்மாள் வேலை செய்த நிறுவனத்தில் திருப்பூர் அவினாசி ரோட்டை சேர்ந்த மனோசங்கரி என்பவர் வேலை செய்து வந்தார். ஒரே நிறுவனம் என்பதால் இருவரும் தோழிகளாகினர். மனோசங்கரியின் கணவர் ரஞ்சித் (35) வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டாக இருந்து வருகிறார். இதனால் மாரியம்மாள் தனது குடும்ப சூழ்நிலை குறித்து மனோ சங்கரியிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் தனது கணவர் மூலம் மணித்துரை, மணிகண்டன் ஆகிய இருவரையும் தாய்லாந்திற்கு அனுப்பிவைப்பதாக கூறினார்.

அதன்படி மாரியம்மாளிடம் இருந்து ரஞ்சித் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் பெற்றுக்கொண்டு, மணித்துரை மற்றும் மணிகண்டன் ஆகியோரை ஜனவரி மாதம் 21-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்திற்கு அனுப்பிவைத்தார். அங்கு உள்ள பனியன் நிறுவனத்தில் அவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.40 ஆயிரம் சம்பளம் எனவும் தெரிவித்தார்.

தாய்லாந்து சென்றதும், ரஞ்சித்துடன் தொடர்புடைய நபர் அவர்களை அழைத்து சென்று அங்கு ஒரு அறையில் அவர்களை தங்கவைத்துவிட்டு சென்றுள்ளார். 3 வாரமாக அவர்களுக்கு எந்த வேலையும் வழங்கப்படவில்லை. பின்னலாடை நிறுவனத்திற்கு அந்தநபர் வேலைக்கு அழைத்து செல்லாமல், அங்குள்ள ஒரு ஓட்டலில் காலை முதல் நள்ளிரவு வரை அறைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வைத்துள்ளனர். மேலும், ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே சாப்பாடு கொடுத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் சுற்றுலா விசாவில் அழைத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மணித்துரை மற்றும் மணிகண்டன் இருவரும் இது தொடர்பாக தனது தாயாரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். உடனே மாரியம்மாள் தனது மகன்களின் நிலைமை குறித்து ரஞ்சித்திடம் கேட்டுள்ளார். அவர் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.

இதனால் பதறிப்போன மாரியம்மாள் திருப்பூர் மத்திய போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு குறித்து போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறாக 5 மாதங்கள் கடந்தன. இந்த நிலையில் மணிகண்டனுக்கு அங்கு ஓட்டலில் சாப்பிட வந்த பஞ்சாப்பை சேர்ந்த பரம்ஜித் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தானும், தனது சகோதரனும் ஏஜெண்டு மூலம் ஏமாற்றப்பட்டு ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மனம் இறங்கிய அவர் ரூ.60 ஆயிரம் அனுப்பிவைத்தால் ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதனை மணிகண்டன் தனது தாயாரிடம் தெரிவித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கி பஞ்சாப் காரரின் வங்கி கணக்கிற்கு மாரியம்மாள் பணத்தை அனுப்பிவைத்தார். அதன்பேரில் விமான டிக்கெட் எடுக்கப்பட்டு மணிகண்டன் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி சென்னை வந்து அங்கிருந்து திருப்பூர் வந்து சேர்ந்தார். ஆனால் மணித்துரை தாய்லாந்திலேயே இருந்தார்.

இதன் பின்னர் தாயும், மகனும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் சென்று, தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் மணித்துரையை மீட்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். இதனையறிந்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தாய்லாந்தில் க‌‌ஷ்டப்படும் மணித்துரையை இந்தியாவிற்கு மீட்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், திருப்பூரில் உள்ள அவரது குடும்பத்திற்கு அனைத்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னையில் உள்ள தூதரகத்தில் இருந்து மாரியம்மாளை தொடர்பு கொண்டுள்ளனர். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே சுற்றுலா விசா முடிவடைந்ததால் அங்குள்ள தூதரகத்தில் மணித்துரை சரண் அடையும்படியும், மேலும், ரூ.30 ஆயிரம் அனுப்பிவைத்தால், தான் டிக்கெட் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும், ஜாமீன் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்வதாக பரம்ஜித்தை தெரிவித்தார். அதன்படி சரணடைந்த மணித்துரைக்கு ரூ.3 ஆயிரம் அபராதமும், 15 நாட்கள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து இந்திய தூதரகத்திற்கும், தாய்லாந்து தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மணித்துரை அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் மணித்துரைக்கான விமான டிக்கெட்டை எடுத்து வைத்திருந்த பரம்ஜித் அவரை போலீசார் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னை வந்த மணித்துரை அங்கிருந்து ரெயில் மூலம் திருப்பூர் திரும்பினார். ரெயில் நிலையத்தில் மகனுக்காக காத்திருந்த மாரியம்மாள் தனது மகனை கண்ணீர் மல்க உருக்கமாக வரவேற்று வீட்டிற்கு அழைத்து சென்றார். மகனை பார்த்த தாய்க்கு கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது.

பனியன் நிறுவன வேலைக்காக தாய்லாந்து சென்று தவித்த மகனை மீட்டது குறித்து மாரியம்மாள் கூறியதாவது:-

தாய்லாந்துக்கு வேலைக்கு சென்ற மகன் சாப்பாடு இல்லாமல் தவிப்பதை கேள்விப்பட்டதும் எனக்கு தூக்கம் வரவில்லை. என் மகனுக்கு வேலை வேண்டாம் அவன் வீடு வந்து சேர்ந்தால் போதும் என்று எண்ணினேன். அவன் படும் அவஸ்தை குறித்தும் அவனை மீட்க வேண்டும் என்றும் மனு கொடுத்தேன்.

மத்திய அரசு எனது மகனை மீட்டு தருவதாகக்கூறி கடந்த 10 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை. இதனால் பயந்து போன நான் ஏஜெண்டு ரஞ்சித்திடம் சென்று எனது மகனை திருப்பூருக்கு அழைத்து வர வேண்டும் என கெஞ்சினேன். ஆனால் அவர் உனது மகனை மீட்டு வர முடியாது. பணத்தையும் திரும்ப தர முடியாது என ஆணவமாக தெரிவித்தார்.

இந்த வேளையில் என்னை செல்போனில் தொடர்பு கொண்ட மணித்துரை ரூ.30 ஆயிரத்தை தான் கொடுக்கும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்புமாறு தெரிவித்தார். அதன்படி ரூ.30 ஆயிரம் அனுப்பினேன். தற்போது நான் மத்திய அரசின் உதவியில்லாமல் எனது சொந்த முயற்சியில் எனது 2 மகன்களையும் மீட்டெடுத்துள்ளேன். போலி ஏஜெண்டு ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும். என்னிடம் இருந்து வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக அவர் பெற்ற ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மற்றும் எனது மகன்களை நான் மீட்க செலவு செய்த ரூ.90 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்தை பெற்றுத்தர வேண்டும். கடவுள் போல் உதவிய பஞ்சாப்காரருக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story