தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்


தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 9 July 2019 11:00 PM GMT (Updated: 9 July 2019 7:17 PM GMT)

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கட்டுமான வசதிகள் மேம்படுத்துதல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆயிரக் கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தநிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட கட்டுமான வசதிகள் மேம்படுத்த அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

தொல்லியல் துறை, தஞ்சை மாநகராட்சி, சுற்றுலாத்துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் ஆகிய துறைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியினை திறம்பட செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் வாகனம் நிறுத்துமிடம் அதிகரித்தல், குடிநீர் வசதி, பொருட்கள் பாதுகாப்பு அறை, புறக்காவல் நிலையம் அமைத்தல், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், கண்காணிப்பு கேமரா, மின் சாதனங்கள் மற்றும் ஒளி விளக்கு வசதியை மேம்படுத்துதல், உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துதல், கிரிவலபாதை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி, பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story