ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 10 July 2019 4:15 AM IST (Updated: 10 July 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் ஊராட்சி கண்டியன் கொல்லை கீழத்தெருவில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் குடிநீருக்காக அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஜெயங்கொண்டம்- செந்துறை சாலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவதாஸ், ஊராட்சி எழுத்தர் ஸ்டாலின், ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள் கூறுகையில், விரைவில் கண்டியன்கொல்லை கீழத்தெருவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டம்- செந்துறை சாலையில் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story