ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எஸ்.பி.பட்டினத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்; கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்


ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எஸ்.பி.பட்டினத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்; கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 July 2019 4:30 AM IST (Updated: 10 July 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எஸ்.பி.பட்டினம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.

தொண்டி,

திருவாடானை தாலுகா, எஸ்.பி.பட்டினம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் உவர்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் வீரராகவ ராவ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையில் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்படாத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு சராசரியாக 80 எம்.எல்.டி. அளவில் உள்ளது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சராசரியாக 35 எம்.எல்.டி. அளவில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதுதவிர உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலமாகவும் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமது சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ரூ.96.11 லட்சம் மதிப்பில் திருவாடானை யூனியன் எஸ்.பி.பட்டினம், ராமநாதபுரம் யூனியன் வெண்ணத்தூர், கடலாடி யூனியன் பொதிகுளம், முதுகுளத்தூர் யூனியன் கொழுந்துரை, திருப்புல்லாணி யூனியன் ரெகுநாதபுரம், காஞ்சிரங்குடி, லாந்தை ஆகிய 7 கிராம மக்களின் நலனுக்காக சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட முன்வந்தது. இதன்படி எஸ்.பி.பட்டினம் மற்றும் கொழுந்துரை கிராமத்தில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்புற சுகாதாரத்தினை மேம்படுத்திட ஏதுவாக 298 தனிநபர் இல்ல கழிப்பறைகள் அமைப்பதற்கு ரூ.89.40 லட்சம் மதிப்பிலும், பல்வேறு நீர் நிலைகளை தூர்வாரி புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.57.50 லட்சம் மதிப்பிலும் நிதி வழங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனம் சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளது.

பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு மாவட்ட நிர்வாகத்துடன் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுதற்குரியது.

பொதுமக்கள் நீர்நிலைகளை பாதுகாப்பதிலும், மழைநீரை சேகரிப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும். சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பட்டினம் கிராமத்தில் உள்ள ஊருணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story