ஏர்வாடி அருகே முன்விரோத தகராறில் பயங்கரம் கட்டிட தொழிலாளி படுகொலை தி.மு.க. பிரமுகருக்கும் அரிவாள் வெட்டு; 3 பேர் கைது-பரபரப்பு தகவல்


ஏர்வாடி அருகே முன்விரோத தகராறில் பயங்கரம் கட்டிட தொழிலாளி படுகொலை தி.மு.க. பிரமுகருக்கும் அரிவாள் வெட்டு; 3 பேர் கைது-பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 10 July 2019 4:30 AM IST (Updated: 10 July 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே கட்டிட தொழிலாளி ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப் பட்டார். தி.மு.க. பிரமுகருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர் பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஏர்வாடி,

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரியை சேர்ந்த ஆறுமுகபெருமாள் மகன் செல்வக்குமார் (வயது 29), கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டின் அருகில் உள்ள கட்டிடத்தின் முன் அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தது. அவர்கள் திடீரென செல்வக்குமாரை அரிவாளால் சரமாரி யாக வெட்டினர். பலத்த வெட்டுக் காயங்களுடன் நிலைகுலைந்த செல்வ குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அந்த மர்ம கும்பல் அவரை சாலையில் ஓட, ஓட விரட்டி சென்று மீண்டும் வெட்டினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அலறியவாறு அவர் சாலையில் விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு அந்த பகுதிக்கு ஓடி வந்தனர். இதை பார்த்த மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த செல்வக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோதைசேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மர்ம கும்பல் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்திற்குள் புகுந்தது. அங்கு வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த முன்னாள் நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் காமராஜ் (58) என்பவரையும் அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அவர் வீட்டுக்குள் ஓடிச் சென்று மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் திரண்டவுடன் அங்கிருந்து தப்பிய மர்ம கும்பல், அருகில் உள்ள இளந்தோப்பு கிராமத்துக்கு சென்றது.

அங்கு விவசாயி கனகராஜ் என்பவரின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிய அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். மர்ம கும்பலின் வெறியாட்டத்தால் வெட்டுக் காயம் அடைந்த காமராஜ் மீட்கப்பட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தொடர் சம்பவங்களால் நாங்குநேரி, ஏர்வாடி, கோதைசேரி பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்வக்குமார் கொலை குறித்து ஏர்வாடி போலீசாரும், பெரும்பத்து மற்றும் இளந்தோப்பு சம்பவங்கள் குறித்து நாங்குநேரி போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர் பாக துப்பு துலக்க போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் சாகுல் அமீது(பணகுடி), ரவிச்சந்திரன்(விஜயநாராயணம்), சாந்தி(நாங்குநேரி) ஆகியோர் தலைமை யில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசார ணையில் பரபரப்பு தகவல் வெளியானது. அதாவது, ஏர்வாடி அருகில் உள்ள மஞ்சன்குளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் சாமித்துரை, சுப்பையா, ராமர் மற்றும் கொலையான கோதைசேரி ஆறுமுகபெருமாளின் மகன் செல்வ குமார், இளந்தோப்பு கனகராஜின் மகன் செல்வக்குமார் ஆகியோர் ஒன்றாக கட்டிட வேலை செய்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டோனாவூர் அருகில் உள்ள கீழமலைய சேரி கிராமத்தில் ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்தபோது சாமித்துரை தரப்பினருக்கும், செல்வக்குமார் தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்குள் சிறு, சிறு தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த பிரச்சினையில் காமராஜ் தலையிட்டு சமாதானம் செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ராமர், சாமித்துரை, சுப்பையா ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து செல்வக்குமாரை வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள், காமராஜை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது. இதை யடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடினர். அப்போது அவர் கள், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் அருகில் உள்ள ஒரு தோட்டத் தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று இரவு அங்கு சென்ற அவர்கள், ராமர் உள்பட 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அந்த 3 பேரும் ஏர்வாடி போலீசாரிடம் ஒப்படைக் கப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கட்டிட தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டதும், தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story